டிஜிட்டல் யுகத்திலும் வீறு கொண்டு எழும் ஓவியக்கலை


டிஜிட்டல் யுகத்திலும் வீறு கொண்டு எழும் ஓவியக்கலை
x

‘சுவர் உள்ளவரை சித்திரம் உண்டு’ என்பதால் டிஜிட்டல் யுகத்திலும் வீறு கொண்டு எழுகிறது ஓவியக்கலை

திருப்பூர்

படைப்பவன் பெயர் இறைவன் என்றால் ஓவியனும் இறைவனுக்கு ஒப்பானவன்தான். ஆம் இருப்பவைகளை மட்டுமின்றி, தனது கற்பனையால் எந்த ஒரு உருவத்தையும் கண்முன்னே நிறுத்தி அதை உயிரோட்டமாக்கும் மாயாஜாலம் நிகழ்த்துபவர்கள் ஓவியர்கள். கேமராக்கள் இல்லாத பழங்காலத்தில் வாழ்ந்த அரசர்களை நம் மனக்கண்ணோட்டத்தில் நிறுத்த செய்தது ஓவியம். அவ்வளவு ஏன் நாம் வணங்கும் கடவுள்களின் உருவம் கூட ஓவியம். கற்காலந்தொட்டு இருந்து வரும் ஓவியக்கலையானது ஒவ்வொரு காலத்திற்கேற்றவாறு மாற்றம் கண்டது. ஒரு கால கட்டத்தில் கோவில்கள், சினிமா, அரசியல், வர்த்தகம் சார்ந்த ஓவியத்திற்கு கடுமையான கிராக்கி இருந்தது.

ஓவியத்திற்கு நிகருண்டோ?

நவீன யுகத்தின் பிடியில் சிக்கி, டிஜிட்டல் மயத்தால் ஓவியத்தின் தேவையில் சறுக்கல் ஏற்பட்டது. இதனால் ஓவியத்தை மட்டுமே நம்பி இருந்த பல ஓவியர்களின் நிலையும் ஆட்டம் கண்டது. இதில் சிலர் கணினி சார்ந்த டிசைன்களுக்கு மாறினாலும், ஓவிய காதலர்கள் பலர் கொடி காத்த குமரன் போல தூரிகையை இன்னும் விடவில்லை. என்னதான் டிஜிட்டல் பிரிண்டிங், விளம்பர பதாகைகள் வந்தாலும், தூரிகையால் வரையப்படும் ஓவியத்திற்கு நிகருண்டோ என சிலாகித்து கொள்ளும் கலாரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நவீன வசதிகள் மூலம் குறிப்பிட்ட ஒரு ஓவியத்தை அச்சு அசலாக அப்படியே கொண்டு வரலாம்.

கட்டிபோடும் கலை

ஆனால் ஓவியர்களோ சுவரின் தன்மை, அங்குள்ள சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு மக்களின் ரசனைக்கேற்றவாறு ஓவியத்தை மாற்றிக்கொள்வார்கள். இதனால் ஓவியத்தை ஆழ்ந்து ரசிப்பவர்கள் இன்னமும் ஓவியர்களை நாடிச்செல்கின்றனர். எத்தனை பரபரப்பில் இருப்பவர்களையும் தத்ரூபமான ஓவியம் ஒரு கணம் கட்டி போட செய்து விடும். தற்போது ஓவியக்கலைக்கு வாய்ப்புகள் அதிகம் வருகிறது. டிஜிட்டல் யுகத்திலும் ஓவியக்கலை வீறு கொண்டு எழுந்து வருவது ஓவியர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. திருப்பூர் மாநகராட்சி சார்பில் பொது சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. இதனால் திருப்பூர் மாநகரில் பொலிவிழந்து காணப்பட்ட நொய்யல் ஆற்றின் கரையில் ஓவியர்கள் தீட்டியுள்ள பல அழகோவியங்கள் வாகனத்தில் செல்வோரை கூட திரும்பி பார்க்க செய்கிறது.

அலங்கோலம் அழகானது

இதேபோன்று பல்வேறு வகையான விளம்பரங்கள், போஸ்டர்களால் அலங்கோலமாக காட்சியளித்த பொது சுவர்கள் தற்போது கண்கவர் ஓவியங்களால் அழகாக மாறியுள்ளது. தெற்கு உழவர் சந்தை சுவரில் காய்கறிகள், பழங்கள், மீன், ஆடு, கோழி, விவசாய காட்சி என தத்ரூபமாக இருக்கும் ஓவியங்களை பலரும் ஆர்வத்துடன் ரசித்து செல்கின்றனர். இதேபோன்று மற்றொரு சுவரில் நீர் சேமிப்பு குறித்து வரையப்பட்டுள்ள ஓவியங்களும் மக்களை கவர்ந்துள்ளது. இதுகுறித்து இந்த ஓவியங்களை வரைந்து வரும் தமிழ்நாடு ஓவியர்கள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஓவியர் ரமேஷ் கூறியதாவது:-

தற்போது கையால் வரையும் ஓவியத்திற்கு அதிக வாய்ப்பு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஓவியர்கள் அதிகம் உள்ளனர்.

காலம் கடந்தும் புகழ்

முழு ஈடுபாட்டுடன் இருக்கும் ஓவியர்கள் எங்கிருந்தாலும் பிரகாசிப்பார்கள். அவர்களின் ஓவியம் காலம் கடந்தும் புகழப்படும். எங்கள் சங்கத்தில் 500 ஓவியர்கள் உள்ளனர். இதில் வயதானவர்கள் மட்டுமின்றி பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களும் அதிகம் உள்ளனர். அடுத்த தலைமுறைக்கும் ஓவியக்கலையை கொண்டு நடத்தப்படும் ஓவிய பள்ளியில் பலர் ஆர்வத்துடன் படித்து வருகின்றனர். கையால் வரையப்படும் ஓவியத்திற்கு அதிக நேரம், அதிக செலவு ஏற்படும் என்ற எண்ணத்தில் சிலர் டிஜிட்டல் படங்களை தேடி சென்றாலும், கையால் வரையப்படும் ஓவியத்தில் ரசனையும், உயிரோட்டமும் இருப்பதால் இதற்கு தனி மவுசு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சுவர் உள்ள வரை சித்திரம்

சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பார்கள் ஆனால் ஓவியர் கணேஷ் கூறும் போது, சுவர் உள்ளவரை ஓவியமும் இருக்கும், ஓவியனும் இருப்பான். வருமானத்தைப்பற்றி ஓவியர்கள் கவலைப்படுவதில்லை. ஓவியம் தியானம் போன்றது. தூரிகையை கையில் எடுத்து விட்டால் அனைத்தையும் மறந்து ஓவியத்தோடு ஒன்றி விடுவோம். நிசப்த அமைதியில் ஓவியம் வரையும் போது எந்த ஒரு சத்தமும் எங்கள் காதை எட்டாது என்றார். தற்போது அரசு இவர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து வருவதால் தமிழகமே இனி ஓவியர்களின் கைவண்ணத்தால் கலைநயமாகும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.


Related Tags :
Next Story