தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சி கோலாகலம்:குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்


தினத்தந்தி 25 Oct 2023 12:15 AM IST (Updated: 25 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தசரா திருவிழா

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.

கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு, பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்தனர்.

அம்மன் வீதி உலா

ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோவிலின் அருகில் பக்தர்கள் தசரா பிறை அமைத்து, அதில் தங்கியிருந்து அம்மனை வழிபட்டனர். ஒவ்வொரு ஊரிலும் பக்தர்கள் தசரா குழுக்கள் அமைத்து, வாகனங்களில் ஊர் ஊராக சென்று, கலைநிகழ்ச்சி நடத்தியும் காணிக்கை வசூலித்தனர். இதனால் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் மாலையில் சமய சொற்பொழிவு, திருமுறை இன்னிசை, பரதநாட்டியம், வில்லிசை, இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடந்தது.

கடற்கரைக்கு எழுந்தருளிய அம்மன்

10-ம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதனையொட்டி காலை முதல் மதியம் வரையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். பெரும்பாலான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர்.

இரவு 11 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நள்ளிரவு 12 மணியளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார். அப்போது காளி வேடம் அணிந்த பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்தனர். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

சூரசம்ஹாரம்

முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன் மூன்று முறை அம்மனை வலம் வந்து போரிட தயாரானான். அவனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். பின்னர் சிங்க முகமாக உருமாறிய மகிஷாசூரன் மீண்டும் உக்கிரத்துடன் போரிடுவதற்காக அம்மனை 3 முறை சுற்றி வந்தான். அவனையும் அம்மன் சூலாயுதம் கொண்டு அழித்தார்.

தொடர்ந்து எருமை முகமாக உருமாறிய மகிஷாசூரன் மறுபடியும் பெருங்கோபத்துடன் அம்மனுடன் போர்புரிய வந்தான். அவனையும் சூலாயுதத்தால் அம்மன் சம்ஹாரம் செய்தார்.

அதன்பிறகு சேவலாக உருமாறி போரிட்ட மகிஷாசூரனையும் அன்னை சூலாயுதத்தால் வதம் செய்தார். அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் 'ஓம் காளி, ஜெய் காளி' என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி அம்மனை வழிபட்டனர்.

சிறப்பு பஸ்கள்

பின்னர் கடற்கரை மேடையில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளிய அம்மனுக்கு சாந்தாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் தேரில் பவனி வந்து கோவிலை சென்றடைந்தார். தொடர்ந்து கோவில் கலையரங்கத்தில் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

தசரா திருவிழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்தும் குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. குலசேகரன்பட்டினம் நகர் முழுவதும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவிலில் பக்தர்கள் எளிதில் சாமி தரிசனம் செய்யும் வகையில், தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் தசரா குழுவினர் வந்து செல்லும் வகையில் தனிப்பாதைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

போலீஸ் பாதுகாப்பு

கடலில் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாதவாறு மிதவை தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலை பகுதியில் 3 தற்காலிக பஸ் நிலையங்கள், வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு இருந்தது.

குலசேகரன்பட்டினம் நகர எல்லையில் தசரா குழுவினர் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பெரும்பாலான பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தியும், பக்தி கோஷங்களை முழங்கியும் வந்தனர். வேடம் அணிந்த பக்தர்கள் சேகரித்த காணிக்கைகளை கோவில் உண்டியலில் செலுத்தினர். ஆங்காங்கே தன்னார்வலர்கள் பக்தர்களுக்கு குடிநீர், அன்னதானம் வழங்கினர். விழாவையொட்டி நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் மேற்பார்வையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில், சுமார் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

11-ம் நாளான இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்கிறார். 4.30 மணிக்கு அம்மனுக்கு காப்பு களையப்பட்டவுடன், வேடம் அணிந்த பக்தர்களும் காப்பு களைவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.

விழாவின் நிறைவு நாளான நாளை (வியாழக்கிழமை) பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரம், அன்னதானம் நடக்கிறது.


Next Story