ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம்
குலசேகரன்பட்டினத்துக்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் தசரா திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் நேற்று காலை பால்குட ஊர்வலம், தூத்துவாரி நடைபெற்றது. பின்னர் சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோவில் ரதவீதிகளில் கொடி பட்டம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. காலை 11 மணிக்கு ஆயிரத்தம்மன் கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கொடி ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனர். இதேபோல் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள 11 அம்மன் கோவில்களிலும் நேற்று தசரா திருவிழா தொடங்கியது.
நேற்று இரவு 11 அம்மன் கோவில் சப்பர வீதிஉலா நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் அனைத்து சப்பரங்களும் பாளையங்கோட்டை ராமசாமி கோவிலில் திடலில் அணிவகுத்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றன.
இன்று முதல் அம்மன் கொலு வீற்றிருக்கும் வைபவம் தொடங்குகிறது. 9 நாட்களுக்கு ஒவ்வொரு அலங்காரத்தில் அம்பாள் காட்சி அளிக்கிறார்.
சூரசம்ஹாரம்
வருகிற 25-ந்தேதி சப்பரங்கள் ராமசாமி கோவில், ராஜகோபாலசாமி கோவில் மற்றும் மார்க்கெட் திடலில் உலா வருகின்றன. அதை தொடர்ந்து நள்ளிரவில் எருமைக்கிடா மைதானத்துக்கு சென்று அணிவகுத்து நிற்க, சூரனை அம்மன் சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் விரதம் மேற்கொண்டு வருகிறார்கள்.