அசோக் நகரில் ஆய்வின் போது சி.ஆர். சரஸ்வதியை நலம் விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


அசோக் நகரில் ஆய்வின் போது சி.ஆர். சரஸ்வதியை நலம் விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 3 Aug 2023 2:38 PM IST (Updated: 3 Aug 2023 9:48 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி வந்து என்னுடன் பேசுவார் என நினைத்துப்பார்க்கவே இல்லை என அமமுக கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.

சென்னை,

அமமுக கட்சி தொடங்கப்பட்டதில் இருந்தே டி.டி.வி.தினகரனுடன் இணைந்து பயணித்து வருபவர் நடிகை சி.ஆர்.சரஸ்வதி. அமமுகவில் தற்போது கொள்கைப் பரப்பு செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பல்வேறு இடங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். சென்னை மாநகராட்சியில் ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கட்டளையிட்டுள்ளதால், வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன.

அதன் அடிப்படையில் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நிறைவடையும் நிலையில் இருப்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் போரூர் மெயின் ரோடு குன்றத்தூர் பிரதான சாலை, பூந்தமல்லி மெயின் ரோடு, அசோக் பில்லர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்தார்.

இந்தநிலையில் சென்னை அசோக் நகரில் ஆய்வுப் பணி மேற்கொண்டபோது திடீரென அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் நலம் விசாரித்தார். ஆய்வுப் பணியை முடித்து திரும்பும்போது எதிர்ப்புறம் சாலையில் நின்றிருந்த சி.ஆர்.சரஸ்வதி முதல்-அமைச்சருக்கு கை கூப்பி வணக்கம் தெரிவித்தார். இதையடுத்து காரில் இருந்து இறங்கிச் சென்று சி.ஆர்.சரஸ்வதியிடம் நலம் விசாரித்தார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்.

மேலும், ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்றும் விசாரித்தார். எதிர்க்கட்சியைச் சேர்ந்த நிர்வாகி வணக்கம் சொன்னதைக் கவனித்து காரில் இருந்து இறங்கிச் சென்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியது அப்பகுதியில் இருந்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முதல்-அமைச்சரின் செயலால் மிகவும் மகிழ்ந்த சி.ஆர்.சரஸ்வதி, அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, "இத்தனை ஆண்டுகளாக அரசியலில் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்ததோ பேசியதோ இல்லை. நான் இப்பகுதியில் அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கிறேன். இன்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சார் பங்கேற்ற தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்வில் பங்கேற்றுவிட்டு இப்போது தான் வந்தேன். முதல்-அமைச்சர் வருவதாகச் சொன்னார்கள். சி.எம். எங்கள் வீட்டை தாண்டி போவதால் வணக்கம் சொல்லலாம் என நின்று கொண்டிருந்தேன்.

எதிர்க்கட்சியாக இருந்தாலும் எல்லோருக்கும் அவர் தானே முதல்-அமைச்சர். நான் வணக்கம் சொல்லிவிட்டு இங்கேயே நின்றேன். முதல்-அமைச்சர் திரும்பி காரில் இருந்து இறங்கி வந்து "எப்படி இருக்கீங்க.. நல்லாருக்கீங்களா?" என விசாரித்தார். என்ன பிரச்சினைகள் இருக்கிறது எனக் கேட்டார். முதல்-அமைச்சரிடம் எங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தேன்.

மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவது பற்றி எடுத்துக்கூறினேன். அதற்காகத்தான் ஆய்வு செய்ய வந்தேன். விரைவில் பணிகளை முடித்து விடுவோம் எனக் கூறினார். மக்களின் பிரச்சினைகளை காது கொடுத்துக் கேட்கும் முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றி. உண்மையிலேயே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.


Next Story