சாலை வசதி இல்லாததால் நடுவழியில் ஆம்புலன்சில் 'குவா குவா'


சாலை வசதி இல்லாததால் நடுவழியில் ஆம்புலன்சில் குவா குவா
x

பீஞ்சமந்தை மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் நடுவழியில் ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது.

திருவண்ணாமலை

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த பீஞ்சமந்தை மலை கிராமத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு பிரசவ வலி தொடர்பாக 108 ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு வந்தது. உடனடியாக ஒடுகத்தூர் பகுதியில் இயங்கும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து மருத்துவ உதவியாளர் செல்வி மற்றும் ஓட்டுனர் பரந்தாமன் ஆகியோர் 108 ஆம்புலன்சில் விரைந்தனர். அங்கு சுரேஷ் என்பவரின் மனைவி ஜெயலட்சுமி (வயது 32) பிரசவ வலியால் அவதிப்பட்டு வந்தார். அவரை 108 ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நோக்கி விரைந்தனர்.

சரியான பாதை வசதி இல்லாததால் குறித்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் மலை சாலையில் இருந்து தரை சாலைக்கு இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அதிகாலை 3 மணிக்கு முத்துக்குமரன் மலை அடிவாரம் அருகே செல்லும் போது ஜெயலட்சுமிக்கு பிரசவவலி அதிகரித்தது.

இதனால் வேறு வழியின்றி உதவியாளர் செல்வி, ஜெயலட்சுமிக்கு பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தாயும், சேயும் ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

குழந்தை 8 மாதத்திலேயே பிறந்ததாகவும், போதிய எடை இல்லாததால் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அவசர ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். தற்போது அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தாயும் சேயும் நலமாக உள்ளனர்.


Next Story