கூடுதல் கட்டிட வசதி இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் மாணவர்கள்
உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி 6 ஆண்டுகளாகியும் கூடுதல் கட்டிட வசதி இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து மாணவ- மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர்.
விழுப்புரம் அருகே குண்டலப்புலியூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த 2002-ல் இருந்து நடுநிலைப்பள்ளியாக இருந்த இப்பள்ளி, 2017-18-ம் கல்வியாண்டில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இப்பள்ளியில் குண்டலப்புலியூர், சிறுவாலைதாங்கல் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டு 6 ஆண்டுகளாகியும் இதுநாள் வரையிலும் உயர்நிலைப்பள்ளிக்கான கூடுதல் கட்டிட வசதியை கல்வித்துறை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இதனால் ஏற்கனவே நடுநிலைப்பள்ளியாக இருந்த அதே கட்டிடங்களில் உயர்நிலைப்பள்ளியும் இயங்கி வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையும், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையும் தனி கட்டிடங்களாக பிரித்து அங்குள்ள 4 கட்டிடங்களில் 10 வகுப்பறைகளும் சேர்ந்து இயங்கி வருகிறது.
சேதமடைந்த கட்டிடங்கள்
இந்த வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகுவதால் கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. ஆங்காங்கே கட்டிட சுவர்களில் விரிசலுடன் காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி கட்டிட மேற்கூரை சிமெண்டு பூச்சுகளும் அவ்வப்போது பெயர்ந்து விழுவதால் மாணவ- மாணவிகள் திக்... திக்... பயத்துடனேயே கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக 6, 7-ம் வகுப்பு மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகுப்பறை கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பதால் மாணவ- மாணவிகள் அச்சத்துடனேயே கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளிக்கு கூடுதல் கட்டிட வசதி இல்லாததால் பல சமயங்களில் 9-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடி நிழலில் அமர்ந்து கல்வி பயிலும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். தற்போது மழைக்காலம் என்பதால் சில நாட்களாக அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக அம்மாணவ- மாணவிகள் அமர வைக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
குடிநீர் கிடைக்காமல் அவதி
மேலும் பள்ளி வளாகத்தில் மாணவ- மாணவிகளின் குடிநீர் தேவைக்காக உள்ள சிறிய அளவிலான குடிநீர் தொட்டி இருந்தும் தற்போது அது பயன்பாடின்றி வெறும் காட்சிப்பொருளாக இருந்து வருகிறது. இந்த குடிநீர் தொட்டிக்கான மின் மோட்டார் பழுதாகி பல நாட்கள் ஆகியும் அது சரிசெய்யப்படாததால் குடிநீர் கிடைக்காமல் மாணவ- மாணவிகள் அல்லல்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் அருகில் இருக்கும் வீடுகளுக்கு சென்று குடிநீர் பருகி வருகின்றனர். அதேபோல் இப்பள்ளியில் கழிவறை வசதி இருந்தும் தண்ணீர் வசதி இல்லை. கூடுதல் கழிவறை வசதியும் இல்லாமல் மாணவ- மாணவிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இந்த அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள், பலமுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை.
ஆக்கிரமிப்பு
இப்பள்ளியின் அருகிலேயே 2 ஏக்கர் அளவில் அரசு புறம்போக்கு இடம் உள்ளது. அந்த இடத்தை பள்ளியின் கூடுதல் கட்டிட வசதிக்காக தேர்வு செய்யலாம் என்று மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் வலியுறுத்தினர். ஆனால் அதற்கான நடவடிக்கையும் இதுநாள் வரை எடுக்கப்படவில்லை. தற்போது அந்த இடத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் விரைந்து நடவடிக்கை எடுக்காமல் வருவாய்த்துறை அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் இருப்பதாக பெற்றோர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. எனவே இதை தவிர்க்க ஆக்கிரமிப்பை அகற்றி அங்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா ?
எனவே மாவட்ட நிர்வாகம், இதில் தலையிட்டு குண்டலப்புலியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளின் சிரமத்தை போக்கிடும் வகையில் அப்பள்ளிக்கு கூடுதல் கட்டிட வசதியை விரைந்து கட்டித்தருவதோடு, அங்கு போதுமான அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்பதே அனைவரின் மிகுந்த எதிர்பார்ப்பாக இருக்கிறது.