மீன்கள் வரத்து அதிகரித்ததால் விலை குறைவு
ஈரோடு மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது.
ஈரோடு மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது.
மீன் மார்க்கெட்
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் கடந்த 2 மாதங்களாக இருந்து வந்தது. இந்த காலகட்டத்தில் மீன்களின் வரத்து குறைந்து விலை கடுமையாக உயர்ந்தது. குறிப்பாக வஞ்சிரம் மீன் கிலோ ரூ.1,300 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டுக்கு நேற்று மீன்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இங்கு 30-க்கும் மேற்பட்ட கடைகளில் கடல் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மீன்பிடி தடைகாலங்களில் வெறும் 5 டன் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வந்த நிலையில் நேற்று 12 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
விலை குறைவு
ராமேசுவரம், காரைக்கால், நாகப்பட்டினம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து ஈரோட்டுக்கு மீன்கள் விற்பனைக்கு வந்தன. வரத்து அதிகமானதால் மீன்கள் விலையும் குறைய தொடங்கி உள்ளது. அனைத்து மீன்களின் விலையும் ரூ.50 முதல் ரூ.150 வரை குறைந்துள்ளது. ஈரோடு மீன் மார்க்கெட்டில் நேற்று விற்பனையான மீன்களின் விலை கிலோவில் வருமாறு:-
அயிலை -ரூ.250, மத்தி -ரூ.250, வஞ்சிரம் -ரூ.1,000, விளா மீன் -ரூ.350, முரல் -ரூ.350, நண்டு -ரூ.400, இறால் -ரூ.700, சீலா -ரூ.450, வெள்ளை வாவல் -ரூ.900, கருப்பு வாவல் -ரூ.750, பாறை -ரூ.500, மயில் மீன் -ரூ.800, கிளி மீன் -ரூ.600, கடல் விலாங்கு -ரூ.300, திருக்கை மீன்-ரூ.400.
இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறும்போது, 'இதேபோன்று தொடர்ந்து மீன்கள் வரத்து அதிகமானால் மேலும் விலை குறைய வாய்ப்பு உள்ளது' என்றனர்.