கனமழையால் குற்றாலம் அருவியில் ஆர்ப்பரித்த தண்ணீர்: வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் பலி


கனமழையால் குற்றாலம் அருவியில் ஆர்ப்பரித்த தண்ணீர்: வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் பலி
x

கனமழையால் குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 2 பெண்கள் பலியானார்கள். 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் குற்றாலத்திற்கு படையெடுத்தபடி உள்ளனர். கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் இரவு 7 மணியளவில் மெயின் அருவியில் திடீரென்று கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வேகமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

5 பேர் இழுத்து செல்லப்பட்டனர்

அப்போது வெள்ளப்பெருக்கில் எதிர்பாராதவிதமாக 4 பெண்கள், ஒரு ஆண் என 5 பேர் இழுத்து செல்லப்பட்டனர். இதை பார்த்த போலீசார் மற்றும் சக சுற்றுலா பயணிகள் ஆண் நபரையும், 2 பெண்களையும் பத்திரமாக மீட்டனர். ஆனால், மற்ற 2 பெண்களும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். தீயணைப்பு படையினர் வந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

2 பெண்கள் பலி

அப்போது, அருவிக்கரையில் இருந்து சிறிது தூரத்தில் அந்த 2 பெண்களின் உடல்கள் மிதந்தன. தீயணைப்பு படையினர் அங்கு சென்று 2 பெண்களின் உடல்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள், சென்னை பெரம்பூரை சேர்ந்த விஜயகுமார் மனைவி மல்லிகா (வயது 46), கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த ராஜாராம் மனைவி கலாவதி (55) என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மெயின் அருவி, ஐந்தருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.


Next Story