கன்னியாகுமரியில் கனமழை: திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு
தொடர் கனமழையால் திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளின் நீர்ப்பிடிப்பு மற்றும் மலையோர பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் 4-வது நாளாக இன்றும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாளான இன்று காலை முதல் இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். ஆனால் அருவியில் குளிக்க முடியாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். வெள்ளப்பெருக்கு தொடர்பாக பேரூராட்சி சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் அணைகளின் நீர் மட்டம் வெள்ள அபாய அளவைக் கடந்து உயர்ந்து வருவதால் வெள்ள அபாயத்தை தடுக்க பொதுப்பணித்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கோதையாறு, குழித்துறை மற்றும் தாமிரபரணியாற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் அறிவித்துள்ளனர்.