தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல்
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், குடிநீர் எடுத்துச் செல்லும் குழாய்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
திருநெல்வேலி,
தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. விடாமல் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக பாபநாசம், காரையாறு, சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய அணைகள் நிரம்பியதால், உபரி நீர் திறந்துவிடப்பட்டது.
இந்த உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரையை ஒட்டிய பகுதிகள் பாதிக்கப்பட்டன. மேலும், பாலங்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள 300-க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மேலும், குடிநீர் எடுத்துச் செல்லும் குழாய்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அத்துடன், உறை கிணறுகளின் மின் மோட்டார்கள், நீரேற்றும் நிலையங்களும் வெள்ளத்திற்கு தப்பவில்லை.
தற்போது குடிநீர் விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. ரூ.100 கோடிக்கும் மேல் பாதிப்புகள் இருக்கும் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.