அமலாக்கத்துறை சோதனையால் குவாரிகள் முடக்கப்பட்டு மணல் கிடைப்பதில் தட்டுப்பாடு; கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் பேட்டி
அமலாக்கத்துறை சோதனையால் குவாரிகள் முடக்கப்பட்டு மணல் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் பொன்குமார் தலைமையில் திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், நலவாரியத்தில் பதிவு புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்கள் போன்ற திட்டங்கள் தொடர்பான நிலுவை விவரங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன், தொழிலாளர் இணை ஆணையர் திவ்வியநாதன், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் பேசியதாவது:-
புதிய திட்டங்கள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாதமும் புதிய, புதிய திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதனால் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். இந்த அரசு அமைந்தபிறகு, அனைத்து உதவிகளும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு கட்டுமான தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கவும், குறைந்தபட்சம் வேட்டி, சேலையாவது வழங்க வேண்டும் என்றும் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
ஆவணங்களில் திருத்தம் செய்து, தப்பான ஆட்களை வாரியத்தில் சேர்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாத குற்றம். கடந்த 2 ஆண்டுகளில் 13 லட்சம் தொழிலாளர்கள் கட்டுமான வாரியத்தில் சேர்ந்துள்ளார்கள். அனைத்து வாரியங்களிலும் 25 லட்சம் பேர் இருக்கிறார்கள். இது தொழிற்சங்க நிர்வாகிகளால் தான் சாத்தியமானது
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் கடந்த 2 ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு 50,145 புதிய பதிவு அட்டை வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்த 52 ஆயிரத்து 838 நலவாரிய தொழிலாளர்களுக்கு ரு.21 கோடியே 47 லட்சத்து 68 ஆயிரத்து 750 உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் நலவாரியத்தில் உள்ள கேட்பு மனுக்களில் உள்ள குறைபாடுகளை விரைவில் நிவர்த்தி செய்து, தொழிலாளிகளுக்கு உதவித்தொகை வழங்கிட அறிவுரைகளும் ஆய்வு கூட்டத்தில் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கட்டுமானம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் மண்டல அளவிலான கூட்டம் திருச்சி ஜங்ஷன் அருகே நடந்தது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
மணல் கிடைப்பதில் தட்டுப்பாடு
சமீபகாலமாக மணல் குவாரிகளில் விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையால் ஒருவார காலமாக குவாரிகள் முடக்கப்பட்டு மணல் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்தியில் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபிறகு, விரும்புகிற இடத்துக்கு சென்று விசாரணை என்ற பெயரில் ஒரு துறையை முடக்குவது, அரசை முடக்குவது கண்டனத்துக்குரியது.
காவிரி நீரை வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், மாநில அரசு நிறைவேற்றாதபோது, அந்த உத்தரவை நிறைவேற்றும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமானத்துறையில் முட்டுக்கட்டைகளாக இருந்த பல பிரச்சினைகளுக்கு இந்த அரசு அமைந்தபிறகு தீர்வு காணப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாநில அளவிலான நன்றி அறிவிப்பு மாநாட்டை நடத்தவும், அதற்கு முதல்-அமைச்சரை அழைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.