குடிபோதையில் தகராறு: வாலிபரை கீழே தள்ளி கொலை செய்த தொழிலாளி கைது
நம்பியூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கீழே தள்ளி கொலை செய்ததாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
நம்பியூர்
நம்பியூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கீழே தள்ளி கொலை செய்ததாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சாவு
நம்பியூர் அருகே உள்ள எம்மாம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் கொமரன். இவருடைய மகன் கருப்புசாமி (வயது 32). அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் சந்திரன் (23). கருப்புசாமியும், சந்திரனும் உறவினர்கள். இவர்கள் 2 பேரும் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கருப்புசாமி வழக்கம்போல் வீட்டில் படுத்து தூங்கினார். நேற்று காலையில் பெற்றோர் எழுப்பியபோது கருப்புசாமி இறந்த நிலையில் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
குடிபோதையில் தகராறு
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வரப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கருப்புசாமியின் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், 'கருப்புசாமியும், சந்திரனும் நேற்று முன்தினம் மது குடித்து உள்ளனர். பின்னர் கருப்புசாமியின் செல்போனை சந்திரன் எடுத்து சென்றார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. தகராறு முற்றியதில் கருப்புசாமியை பிடித்து சந்திரன் தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் கருப்புசாமிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது தெரியாமல் கருப்புசாமி தூங்கியபோது இறந்ததும்,' தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சந்திரன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.