பா.ம.க.விடம் ஆட்சி இருந்தால் 2 நாளில் போதைப்பொருள் விற்பனைக்கு முடிவு- அன்புமணி ராமதாஸ்


பா.ம.க.விடம் ஆட்சி இருந்தால் 2 நாளில் போதைப்பொருள் விற்பனைக்கு முடிவு-  அன்புமணி ராமதாஸ்
x

‘‘பா.ம.க.விடம் ஆட்சி-அதிகாரம் இருந்தால் 2 நாட்களில் போதைப்பொருள் விற்பனைக்கு முடிவு கட்டுவேன்’’ என்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

பா.ம.க. ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ம.க. சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்கினார். தேர்தல் பிரிவு தலைவர் ஏ.கே.மூர்த்தி, பசுமை தாயகம் இணை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கே.என்.சேகர் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

குண்டர் சட்டத்தில் கைது

தமிழகத்தில் சமீபத்தில் ஆய்வு ஒன்றில் மொத்த மக்கள் தொகையில் 50 லட்சம் பேர் போதைப்பழகத்துக்கு அடிமையாகி கிடக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு தாராளமாக கஞ்சா, ஹெராயின், கொகைன், எல்.எஸ்.டி. போன்ற போதை வஸ்துகள் கிடைக்கின்றன. போலீசாருக்கு தெரியாமல் இந்த பொருட்கள் விற்பனை செய்ய முடியாது. போலீசார் மீது எங்களுக்கு மதிப்பு-மரியாதை உண்டு. ஆனால் சிலர் செய்யும் தவறுகள் அனைவரையுமே தவறாக எண்ண வைத்து விடுகிறது.

ஆனால் போலீசார் ஏராளமானோரை கைது செய்து வருவதாக கூறுகிறார்கள். கைது செய்யப்பட்டோரில் பெரும்பாலானோர் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள். போலீசாரின் இந்த நடவடிக்கை போதாது. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும். அப்போதுதான் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும்.

பா.ம.க. ஆட்சி இருந்தால்...

போதைப்பொருட்கள் விற்பனை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடமே நேரில் சென்று வலியுறுத்தினேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாட்டை சுமக்கவேண்டிய இளைஞர்கள் இப்போது சுமையாக மாறி போயிருக்கிறார்கள். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை போல போதைப்பொருள் கலாசாரம் தமிழகத்தில் பெருகி போயிருப்பது வேதனை அளிக்கிறது.

எங்களிடம் மட்டும் ஆட்சி, அதிகாரம் இருந்தால் 2 நாட்களில் தமிழகம் முழுவதும் போதைப்பொருள் விற்பனையை ஒழித்து கட்டுவேன். எங்கேயாவது போதைப்பொருட்கள் விற்பனை நடப்பது தெரியவந்தால் அந்த பகுதிக்குட்பட்ட போலீஸ் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்' செய்யப்படுவார். இப்படி பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தமிழக இளைஞர்களை பாதுகாக்க சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பேன்.

அடுத்தகட்ட போராட்டங்கள்

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி தந்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் ஒரு மதுக்கடை கூட மூடப்படவில்லை. இந்த அரசுக்கு மதுக்கடை மூலம் வருமானத்தை பெருக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்கவும் உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. போதைப்பொருள் விற்பனையை தடுக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லிவிட்டால் ஒரு வாரத்திலேயே நல்லதொரு தீர்வு கிடைக்கும்.

எனவே கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், அனைத்து கட்சிகள் கூட்டத்தை முதல்-அமைச்சர் உடனடியாக கூட்டி, போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விரைவான நடவடிக்கைகளை கையாள வேண்டும். இல்லையேல் அடுத்தகட்ட போராட்டங்களை பா.ம.க. முன்னெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story