போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
வால்பாறையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வால்பாறை
வால்பாறையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரிலும் வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு கீர்த்திவாசன் அறிவுரையின் பேரிலும் வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள், பேரணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம், கோவை 6-வது மருத்துவ பிரிவு தேசிய மாணவர் படை, இளைஞர் செஞ்சிலுவை சங்க மாணவ-மாணவிகளுக்கு போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதையடுத்து அவர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியாக சென்றனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர். பேரணியின் முடிவில் காந்தி சிலை பஸ் நிறுத்தம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையில் மாணவ-மாணவிகள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.