மாணவர்களிடையே பரவும் போதைப் பழக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்


மாணவர்களிடையே பரவும் போதைப் பழக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
x

தமிழக அரசு, மாணவர்களிடம் ஒழுக்கத்தைப் போதிக்க தீவிர முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி மாநில செயலாளர் மூகாம்பிகா இரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே வெவ்வேறு வகையான போதைப் பொருட்கள் புழங்கத் தொடங்கியுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்த பெரும் அபாயத்தை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த தமிழக அரசும், காவல் துறையும் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி முன்பாக பிளஸ் டூ மாணவர் ஒருவர் பள்ளிச் சீருடையிலேயே மது போதையில் சாலையில் தள்ளாடி விழுந்துள்ளார். அவரை சக மாணவர் பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இதேபோல, சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வந்த மாணவரை, போதைப் பொருள் பயன்படுத்துவதாகக் கூறி, ஆசிரியர் கண்டித்துள்ளார். அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதில் மனமுடைந்த மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மது மட்டுமின்றி, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களும் மாணவர்களைச் சீரழித்து வருகின்றன. கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே தங்கு தடையின்றி போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதவிர, சில வகையான மாத்திரை, மருந்து உள்ளிட்டவையும் போதைப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. சாக்லெட், பபுள்கம் உள்ளிட்ட வடிவங்களிலும் போதைப் பொருட்கள் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பல தனியார் பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையானது பள்ளி நிர்வாகத்துக்குத் தெரிந்தாலும், பள்ளியின் பெயர் கெட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காக அவற்றை மறைத்துவிடுகின்றனர்.

போதை அதிகமாகி சக மாணவர்களிடையே பிரச்சினை செய்வது, அடிதடியில் ஈடுபடுவது, ஆசிரியரிடம் தகராறில் ஈடுபடுவது போன்றவை அதிகரித்து வருவதாகவும் வெளியாகும் தகவல்கள், பெரும் வேதனையை அளிக்கின்றன. இதன் நீட்சியாக தற்கொலை, கொலைகூட நேரிடும் அபாயச் சூழல் ஏற்பட்டுள்ளது. இளைய தலைமுறையை சீரழிக்கும் இந்த விவகாரத்தில் அரசு கூடுதல் அக்கறை செலுத்தவேண்டியது அவசியமாகிறது.

எனவே, தமிழக அரசு உடனடியாக மது விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு மது விற்பனை செய்யும் ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கண்காணித்து, பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கல்வியில் சிறந்த தமிழகம் என்று பெருமை பேசிக்கொள்ளும் தமிழக அரசு, மாணவர்களிடம் ஒழுக்கத்தைப் போதிக்க தீவிர முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story