கிணற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலி


கிணற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலி
x

நெல்லை மேலப்பாளையத்தில் 10-ம் வகுப்பு மாணவர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையத்தில் 10-ம் வகுப்பு மாணவர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது;-

பள்ளி மாணவர்

நெல்லை மேலப்பாளையம் கரீம்நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் முகமது அசன். இவர் நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு கடையில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி முகமது ஜெரினா. இவர்களுக்கு 4 மகன்கள். இதில் மூத்த மகனான முகமது அப்சர் (வயது 16) அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று மதியம் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி உள்ளார். பின்னர் அவர்கள் அங்குள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றுள்ளனர். அங்குள்ள 40 அடி ஆழம் உள்ள கிணற்றில் அவர்கள் குளித்துக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக முகமது அப்சர் திடீரென தண்ணீரில் மூழ்கினார்.

உயிர் இழந்தான்

இதுகுறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு உடனே சென்றனர். தொடர்ந்து பாளையங்கோட்டை, பேட்டை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மாவட்ட உதவி அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், பேட்டை நிலைய அலுவலர் முத்தையா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்றனர். 5 மோட்டார்களை வைத்து கிணற்றில் உள்ள தண்ணீரை இறைத்து வெளியேற்றினர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் டீப் வாட்டர் கேமரா உதவியுடன் மாணவனை கண்டுபிடித்தனர். மாணவனின் உடலை பார்த்து அவனின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா். 10-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி உயிர் இழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story