செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய வழக்கு: டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு


செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய வழக்கு: டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு
x

படத்தில் நடிக்க இருப்பதால் தனக்கு ஜாமீன் வேண்டும் எனக்கோரி டிடிஎப் வாசன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மதுரை,

பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக பைக் ஓட்டியதாக பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனை போலீசார் கடந்த ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் டிடிஎப் வாசன் புழல் சிறையில் இருந்து கடந்த நவம்பரில் ஜாமீனில் வெளியே வந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகள் ரத்து செய்து உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த சூழலில் சமீபத்தில் ஹைவேயில் கார் ஓட்டி சென்ற டிடிஎப் வாசன், தான் கம்பேக் கொடுத்து விட்டதாக தனது ரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மதுரை அண்ணாநகர் போலீசாரால் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும்போது செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக இன்று மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதற்கிடையே, படத்தில் நடிக்க இருப்பதால் தனக்கு ஜாமீன் வேண்டும் எனக்கோரி டிடிஎப் வாசன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, டிடிஎப் வாசனின் வழக்கறிஞர் வாதிடுகையில், "டிடிஎப் வாசன் வளரும் இளைஞர், படத்தில் நடிக்க உள்ளார். வீடியோவுக்கு மன்னிப்பு கூட கேட்கிறோம். தலைக்கவசம் வழங்குவது, மழை வெள்ளத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்குவது ஆகியவற்றை செய்துள்ளார்." என்றார்.

தொடர்ந்து அரசு தரப்பு வழக்கிறிஞர், "கார் ஓட்டுநர் உரிமம் பெற எல்.எல்.ஆர். மட்டுமே வைத்துள்ள வாசன், தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை இயக்கியுள்ளார் என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், இதுபோன்று செயலில் ஈடுபட மாட்டேன் என மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story