பெரியகுளம் நகராட்சியில் இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தம்
பெரியகுளம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு சோத்துப்பாறை அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரீச்சம் ஏரியில் இருந்து வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு அணையில் சேகரிக்கப்படுகிறது. இந்த அணையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மீன் பிடிப்பதற்கு ஏதுவாக தண்ணீர் திறந்து விடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அணையில் இருந்து குடிநீருக்கு வினியோகம் செய்யப்பட்ட தண்ணீர் கலங்கலாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர்.
இந்த நிலையில் மொத்த உயரம் 126.28 அடி கொண்ட சோத்துப்பாறை அணையில் நேற்று முன்தினம் நிலவரப்படி நீர்மட்டம் 29 அடி இருந்தது. அணையில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாததால் பொதுப்பணித்துறையினர் வெளியேற்றினர். இதன் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) பெரியகுளம் நகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், நகராட்சி தலைவர் சுமிதா, ஆணையாளர் புனிதன் மற்றும் கவுன்சிலர்கள் கொடைக்கானல் பேரீச்சம் ஏரிக்கு நேரில் சென்றனர். அங்கு ஏரியை பார்வையிட்டு நகராட்சிக்கு தேவையான குடிநீரை திறந்து விட நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து நேற்று பேரீச்சம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பேரீச்சம் ஏரியிலிருந்து வரும் தண்ணீரை குழாய் மூலம் நேரடியாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று பெரியகுளம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.