சென்னை மாநகருக்கு அடுத்த 8 மாதங்களுக்கு தேவையான குடிநீர் இருப்பு - பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்


சென்னை மாநகருக்கு அடுத்த 8 மாதங்களுக்கு தேவையான குடிநீர் இருப்பு - பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
x

‘சென்னை மாநகருக்கு அடுத்த 8 மாதங்களுக்கு தேவையான குடிநீர் மட்டும் இருப்பு உள்ளது' புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.

சென்னை

குடிநீர் ஏரிகள்

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து பெறப்படும் நீர் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருவதால் ஏரிகளுக்கு நீர் வந்து கொண்டு இருக்கிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் காலை 8 மணியில் இருந்து நேற்று காலை 8 மணி வரை, 24 மணி நேரத்தில் பூண்டி ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் 87 மில்லி மீட்டர் அளவு மழை பெய்தது.

இதேபோல், சோழவரம் பகுதியில் 55 மி.மீ., பூண்டி 24 மி.மீ., கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை 26 மி.மீ., செம்பரம்பாக்கம் 26 மி.மீ. மற்றும் தாமரைப்பாக்கம் 41 மி.மீ., கொரட்டூர் அணைக்கட்டு 7 மி.மீ., நுங்கம்பாக்கம் 21 மி.மீ., மீனம்பாக்கம் 3.6 மி.மீ. என்ற அளவில் மழை பதிவானது. இதுதவிர பூண்டி ஏரியில் கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் 165 கன அடியும், மழை நீராக 845 கன அடி உட்பட 1,010 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

ஏரிகளின் நீர் இருப்பு

3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி (3.3) டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரிக்கு 845 கன அடி நீர் வரத்து மூலம், ஏரியின் கொள்ளளவு 1,963 மில்லியன் கன அடி (1.9 டி.எம்.சி.) ஆக உயர்ந்து உள்ளது. குடிநீர் தேவைக்காக 70 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரிக்கு 71 கன அடி நீர் வரத்து மூலம், ஏரியின் கொள்ளளவு 116 மில்லியன் கன அடியாக இருந்து வருகிறது.

அதேபோல், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி (3.3 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட புழல் ஏரிக்கு 166 கன அடி வீதம் நீர்வரத்து மூலம் ஏரியின் கொள்ளளவு 1,909 மில்லியன் கன அடி (1.9 டி.எம்.சி.) இருப்பு உள்ளது.

500 மில்லியன் கன அடி (அரை டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிக்கு 19 கன அடி நீர் வரத்து மூலம் 343 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக 19 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி (3.6 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரிக்கு 234 கன அடி வீதம் நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதன் மூலம் 2 ஆயிரத்து 758 மில்லியன் கன அடி (2.7 டி.எம்.சி.) இருப்பு இருக்கும் நிலையில், குடிநீர் தேவைக்காக 153 கன அடி நீர் வீதம் திறக்கப்படுகிறது.

8 மாதங்களுக்கு குடிநீர் இருப்பு

இதேபோல் 1,465 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் இருப்பு 1,124 மில்லியன் கன அடி (1.1 டி.எம்.சி.) இருக்கும் நிலையில், குடிநீர் தேவைக்காக 141 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 9 ஆயிரத்து 50 மில்லியன் கன அடி (9 டி.எம்.சி.) நீர் இருந்தது. ஆனால் தற்போது 8 ஆயிரத்து 116 மில்லியன் கன அடி (8.1 டி.எம்.சி.) இருப்பு உள்ளது. சராசரியாக ஒரு மாதத்திற்கு மாநகரின் குடிநீர் தேவைக்கு 1 டி.எம்.சி. தேவைப்படுகிறது. அதன்படி பார்த்தால் அடுத்து வரும் 8 மாதங்களின் தேவையை பூர்த்தி செய்ய தேவையான குடிநீர் மட்டும் இருப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை வந்தால் ஏரிகளை நிரப்ப திட்டமிடப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் கீழ் செயல்படும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story