சங்கரன்கோவில் தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு விரைவில் சரிசெய்யப்படும்; ராஜா எம்.எல்.ஏ. தகவல்
சங்கரன்கோவில் தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு விரைவில் சரிசெய்யப்படும் என ராஜா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட சங்கரன்கோவில், மேலநீலீதநல்லூர், குருவிகுளம், மானூர் ஆகிய யூனியன்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று ராஜா எம்.எல்.ஏ.விடம் பலர் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து ராஜா எம்.எல்.ஏ. கூறுகையில், "சங்கரன்கோவில் தொகுதியில் 4 ஒன்றியங்களில் முன்னாள் முதல்வர் கலைஞரால் கொண்டுவரப்பட்ட தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மட்டும் தான் செயல்பட்டு வருகின்றது. மேலும் அங்குள்ள பகுதியில் 26 இடங்களில் தண்ணீர் செல்லும் பாதைகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விநியோகம் சீராக செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். மேலும் சங்கரன்கோவில் நகரத்தைப் பொறுத்தவரை புதிய குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. எனவே அதனையும் விரைந்து முடிக்க வேண்டும் எனவும், வேறு குடிநீர் ஆதாரங்கள் இல்லாததால் புதிய கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளேன். இதுகுறித்து அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து உடனடியாக நிரந்தர நீர்நிலைகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்ததுள்ளார். எனவே சங்கரன்கோவில் தொகுதியில் விரைவில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாகும்" என்றார்.