நெல்லை வண்ணார்பேட்டையில் குடிநீர் தட்டுப்பாடு; பொதுமக்கள் கடும் அவதி


நெல்லை வண்ணார்பேட்டையில் குடிநீர் தட்டுப்பாடு; பொதுமக்கள் கடும் அவதி
x

நெல்லை வண்ணார்பேட்டையில் குடிநீர் தட்டுப்பாட்டால் ெ்பாதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருநெல்வேலி

வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு, நெல்லை மாவட்டம் பொதிகை மலையில் உற்பத்தியாகி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் சங்கமம் ஆகிறது. இந்த ஆறு மூலம் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தாமிரபரணி ஆற்றின் கரையில் தான் நெல்லை மாநகரம் அமைந்துள்ளது. ஆனாலும் மாநகரில் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சினை நிலவுகிறது.

குறிப்பாக, வண்ணார்பேட்டை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது. மேலும் பாளையங்கோட்டை, நெல்லை டவுன் உள்ளிட்ட இடங்களிலும் சரிவர குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வருவதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வண்ணார்பேட்டை பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தண்ணீர் பிடித்து செல்கிறார்கள். மேலும் மோட்டார்சைக்கிள், சைக்கிளில் வந்து கேன் மற்றும் குடங்களில் தண்ணீர் பிடித்து செல்வதையும் பார்க்க முடிகிறது. எனவே சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'நெல்லை மாநகர பகுதியில் பல இடங்களில் குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. இதை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வண்ணார்பேட்டை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வீடுகள் மற்றும் ஓட்டல்களில் குடிநீர் இணைப்பில் மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சி எடுப்பதே காரணம் ஆகும். எனவே தான் அனைவருக்கும் சீராக குடிநீர் கிடைப்பது இல்லை. ஆகையால் அதிகாரிகள் இதில் உரிய நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் சீராக குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும்' என்று தெரிவித்தனர்.


Next Story