ஜெயங்கொண்டம் 4-வது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு


ஜெயங்கொண்டம் 4-வது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு
x

ஜெயங்கொண்டம் 4-வது வார்டில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்

குடிநீர் தட்டுப்பாடு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு விருத்தாச்சலம் ரோடு, அடிபள்ளத்தெரு, மாந்தோப்பு தெரு, காமராஜ் சிலை உள்ளிட்ட தெருக்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஒருநாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் குறைந்த நேரம் மட்டுமே தண்ணீர் வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும், அப்பகுதி மக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மற்ற தெருக்களுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகிறார்கள்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த ஒரு ஆண்டாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விருத்தாச்சலம் ரோடு, மாந்தோப்பு தெரு, காமராஜ் சிலை, அடிப்பள்ள தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

மேலும் இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் பொது கழிவறையை பயன்படுத்தி வந்தோம். தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் பொதுகழிவறையை பயன்படுத்த முடியாமல் அவதியடைந்து வருகிறோம். எனவே இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஜெயங்கொண்டம் நகராட்சி அதிகாரிகள் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story