குடிநீர் வசதியின்றி தவிக்கும் பொதுமக்கள்


குடிநீர் வசதியின்றி தவிக்கும் பொதுமக்கள்
x

குடிநீர் வசதியின்றி பொதுமக்கள் தவித்து வருகிறாா்கள்.

கடலூர்


கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இதில் வார்டுகள் தோறும் மக்கள் சந்தித்து வரும் அடிப்படை பிரச்சினைகள், குறைகளை பார்த்து வருகிறோம். இன்று 19-வது வார்டு மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள், குறைகளை பற்றி பார்க்கலாம்.

இந்த வார்டில் முத்துக்குமரன் தெரு, பாலாஜிநகர், லெட்சுமிநகர், இரட்டைபிள்ளையார் கோவில் காலனி, கூட்டுறவு நகர், இளம்வழுதிநகர், பாலசுப்பிரமணியம் நகர், சண்முகாநகர் ஆகிய பகுதிகள் உள்ளன.

குடிநீர் பிரச்சினை

இங்குள்ள முத்துக்குமரன் தெருவில் கடந்த 40 ஆண்டுகளாக குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதிமக்கள் லாரி, டிராக்டரில் வரும் தண்ணீரை குடம் ரூ.10-க்கு பிடித்து வருகின்றனர். இதனால் தங்களுக்கு குடிநீர் குழாய் அமைத்து தண்ணீர் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இது வரை நடக்கவில்லை. தற்போது இந்த பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். அப்படி குடிநீர் குழாய் அமைத்து தண்ணீர் வழங்கினால், அப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயன் உள்ளதாக இருக்கும்.

முத்துக்குமரன் காலனி தெருவில் சிமெண்டு சாலை சேதமடைந்து காணப்படுகிறது. 110 மீட்டர் தூரமுள்ள இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூட்டுறவு நகர் 6 குறுக்கு தெருவிலும் தார் சாலை அமைப்பதற்காக ஜல்லி கொட்டுப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. அதேபோல் புதைவட மின் கேபிள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சிமெண்டு சாலையும் போடப்பட்டு வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நவீன எரிவாயு தகன மேடை

இந்த பகுதியில் அதிக குற்றங்கள் நடக்கும் பகுதியாக உள்ளது. ஆகவே இங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். வார்டில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் தெருமின்விளக்கு அமைக்க வேண்டும். அதுவும் எல்.இ.டி. விளக்காக பொருத்த வேண்டும். 6 வார்டு மக்கள் இந்த புதுப்பாளையம் மயான கொட்டகையில் தான் பிணங்களை எரித்து வருகின்றனர். ஆகவே இங்கு நவீன எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இது வரை பணிகள் நடக்கவில்லை. இதற்காக ரூ.1½ கோடியில் பணி டெண்டர் விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்பதும் அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையில் ஒன்றாக இருக்கிறது.

மழைக்காலங்களில் கூட்டுறவு நகர், இளம்வழுதிநகர், இரட்டைபிள்ளையார்கோவில் காலனி, பாலாஜிநகர், சண்முகாநகர் ஆகிய பகுதிகளில் அளவுக்கு அதிகமான தண்ணீர் தேங்கி நிற்கும். குறிப்பாக பல்வேறு வார்டு களில் இருந்து வரும் தண்ணீரும் இந்த வார்டில் தான் வந்து தேங்கி நிற்கிறது. ஆனால் போதிய வடிகால் வசதி இல்லாததால் பொதுமக்கள் ஆண்டுதோறும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதை தவிர்க்க போதிய மழைநீர் வடிகால் வசதி அமைத்து தர வேண்டும்.

குப்பைகளை அள்ள வேண்டும்

குப்பைகள் தெருக்களில் ஆங்காங்கே மலைபோல் குவிந்து கிடக்கிறது. குப்பைகளை அள்ள ஆட்கள் பற்றாக் குறை உள்ளது. கூடுதல் பணியாளர்களை நியமித்து, குப்பைகளை உடனுக்குடன் அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். சில நேரங்களில் குடிநீர் கலங்களாக வருகிறது.

இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இளம்வழுதிநகரில் நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்க வேண்டும். புதிய அங்கன்வாடி மையம் கட்டித்தர வேண்டும். ஏற்கனவே உள்ள அங்கன்வாடி மையத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் ரேஷன் கடையை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது பற்றி இரட்டைபிள்ளையார் கோவில் காலனியை சேர்ந்த நீதிதேவன் கூறுகையில், முத்துக்குமரன் காலனி தெருவில் குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது.இதற்காக குடிநீர் குழாய் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை துரிதமாக செய்ய வேண்டும். இரட்டைபிள்ளையார் காலனியில் உள்ள 65 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வேளாண்மை துறை அமைச்சரிடம் மனு அளித்து உள்ளோம். இதை பெற்று தர வேண்டும். சுடுகாட்டு வெளியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அதில் பன்றிகள் உலா வருகின்றன. இதை தடுக்க வேண்டும். மேலும் நவீன எரிவாயு தகன மேடை அமைத்து தர ஏற்பாடு செய்ய வேண்டும்.

காலனி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பூங்கா அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். இதை செய்து தர வேண்டும். மழைநீர் வடிகால் பாலம் உடைந்து கிடக்கிறது. இதனால் தெருவுக்குள் செல்ல முடிய வில்லை. இதை சீரமைத்து தர வேண்டும். போட்டித்தேர்வுக்கான படிப்பகம் அமைத்து தர வேண்டும். சேதமடைந்த சாலைகளை பராமரித்து தர வேண்டும் என்றார். இது பற்றி பாலசுப்பிரமணியம் நகரை சேர்ந்த வெங்கடேசன் கூறுகையில், கூட்டுறவு நகர், இளம்வழுதிநகரில் சேதமடைந்த சாலையை சீரமைக்க ஜல்லிகள் கொட்டப்பட்டுள்ளது. இந்தபணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கூட்டுறவுநகர், இளம்வழுதிநகரில், இரட்டைபிள்ளையார் காலனி நகரில் கழிவுநீர் கால்வாய் தூர்வாராமல் உள்ளது. இணைப்பு வாய்க்காலும் இல்லை. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதை மழைக்காலத்திற்குள் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story