குடிநீர் வடிகால் வாரியம் இந்தியாவில் முதலிடத்தை பெற்றுள்ளது
தி.மு.க. ஆட்சியில் தான் குடிநீர் வடிகால் வாரியம் இந்தியாவில் முதல் இடத்தை பெற்றுள்ளது என அமைச்சர் கே.என். நேரு கூறினார்.
தி.மு.க. ஆட்சியில் தான் குடிநீர் வடிகால் வாரியம் இந்தியாவில் முதல் இடத்தை பெற்றுள்ளது என அமைச்சர் கே.என். நேரு கூறினார்.
அரசு விழா
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டார்.
மாவட்டத்தில் 1,331 கிராமங்களுக்கு ரூ. 1,387 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதோடு சாத்தூரில் ரூ.48 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டத்தையும், ராஜபாளையத்தில் ரூ.251 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டத்தையும் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.11 ஆயிரம் கோடி தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
முதல் இடம்
நடப்பு ஆண்டில் ரூ.16 ஆயிரம் கோடி நிதி நிதிஒதுக்கீடு செய்துள்ளார். தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் குடிநீர் வடிகால் வாரியம் இந்திய அளவில் முதல் இடத்தை பெற்று விருது பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்திற்கு கடந்த 2 ஆண்டுகளில் குடிநீர் வடிகால் வாரியத் திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் ரூ. 3,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
நடப்பு ஆண்டில் மாநகராட்சிக்கு ரூ.61 கோடியும், 5 நகராட்சிகளுக்கு ரூ.168 கோடியும், 9 பேரூராட்சிகளுக்கு ரூ.85 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்து தரப்பட்டுள்ளது. திட்ட பணிகளை விரைந்து முடிக்க துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும். எனவே தொடர்ந்து மாவட்டம் பல்வேறு திட்டங்களை பெறுவதற்கு தி.மு.க. ஆட்சியை வலுவுள்ளதாக்க ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ்மீனா திட்டப் பணிகளை விளக்கினார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் தங்கபாண்டியன், சீனிவாசன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், நகராட்சி, பேரூராட்சி, யூனியன் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.