முட்டுக்காட்டில் தூர்வாரும் பணிகள் - உதயநிதி ஸ்டாலின் ஆய்வு


முட்டுக்காட்டில் தூர்வாரும் பணிகள் -  உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
x

பக்கிங்காம் கால்வாயின் முகத்துவாராம் அமைந்துள்ள முட்டுக்காட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

சென்னை,

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு மழை நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பகுதியில் கோவளம் ஆறு மற்றும் நீலக்கொடி ஆறுகளின் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளைதுணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, சென்னை சோழிங்கநல்லூர் அக்கறை பகுதியில் உள்ள பக்கங்ஹாம் கால்வாயில் நடைபெறும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

இது தொடர்பாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், வடகிழக்குப் பருவ மழைக்காலத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி, மழை நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுமேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க திமுக அரசு இரவு – பகலாக தூர்வாருதல் உள்ளிட்டப்பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அந்த வகையில், பக்கிங்காம் கால்வாயின் முகத்துவாரம் அமைந்துள்ள முட்டுக்காட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாலை ஆய்வு செய்ததாகவும் அதில் பதிவிட்டுள்ளார்.

மேலும், சென்னையைப் பொறுத்தவரை, கொசஸ்தலை ஆறு, அடையாறு, கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாய் வழியாக மழைநீர் கடலில் கலந்திட ஏதுவாக, நீர்வளத்துறை சார்பில் நீர்வழித் தடங்களைத் தூர்வாரும் பணிகள் குறித்து அதிகாரிகள், அலுவலர்களிடம் கேட்டறிந்ததாக தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இதற்காக 200-க்கும் அதிகமான எந்திரங்கள், ஆயிரக்கணக்கான பணியாட்கள் என 80 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இப்பணிகள் தொடர ஆலோசனைகளை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story