ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ள ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி - அமைச்சர் எ.வ.வேலு


ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ள ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி  -   அமைச்சர் எ.வ.வேலு
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 10:54 AM IST)
t-max-icont-min-icon

ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ள ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி என்று கள்ளக்குறிச்சியில் நடந்த விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியக்குழு தலைவர், துணை தலைவர், உறுப்பினர்களுக்கு நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம்.கார்த்திகேயன், மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர் ரமேஷ்குமார் வரவேற்றார்.

பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதிதாக பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் ஒன்றியகுழு தலைவராக நியமனம் செய்யப்பட்ட ஆறுமுகம், துணை தலைவராக நியமனம் செய்யப்பட்ட பாலகிருஷ்ணன் மற்றும் 15 உறுப்பினர்களுக்கு தேர்வு செய்யப்பட்டதற்கான நியமன ஆணையை வழங்கினார்.

முதலிடம் பெற வேண்டும்

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு தற்போது பால்வளத்துறை புதிதாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பால் உற்பத்தியில் மற்ற மாவட்டங்களை விட சிறப்பானதாக செயல்பட்டு, முதலிடம் பெறும் வகையில் செயல்பட வேண்டும். இது தவிர பால் உபபொருட்கள் மாதம் ஒன்றுக்கு சராசரியாக ரூ.21 லட்சம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், மாவட்டத்தில் 102 செயற்கை முறை கருவூட்டல் மையங்கள் மூலம் மாதம் சராசரியாக 6 ஆயிரம் சினை ஊசிகள் போடப்பட்டு வருகின்றன. மேலும் தேசிய அளவிலான செயற்கை முறை கருவூட்டல் திட்டத்தின் கீழ் 43 சங்கங்களில் பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. இதனை அனைத்து பால் உற்பத்தியாளர்கள பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கலெக்டர் அலுவலகம்

மேலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறநிலையத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ள ஆட்சி தான் இந்த திராவிட மாடல் ஆட்சியாகும். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் தற்போது தற்காலிகமாக ஒரு இடத்தில் இயங்குகிறது. இதற்கு காரணம் அப்போதிருந்தவர்கள் என்பது உங்களுக்கே தெரியும்.

ஆனால் இன்று அந்த துறை அமைச்சராக நானே இருக்கும் காரணத்தினால் , முதல்-அமைச்சர் எனக்கு ஆணையிட்டதன் காரணமாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக்கில் வெற்றி பெற்று, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தேவையான அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரிபெருமாள், கள்ளக்குறிச்சி நகர்மன்ற தலைவர் சுப்ராயலு, கள்ளக்குறிச்சி ஒன்றிய குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைப்பதிவாளர் (பால்வளம்) நாகராஜ் சிவக்குமார் மற்றும் ஒன்றிய குழு தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story