தமிழக கவர்னரை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் - கி.வீரமணி தலைமையில் நடந்தது
தமிழக கவர்னரை கண்டித்து கி.வீரமணி தலைமையில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஜனாதிபதி ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பிடக்கோரி திராவிடர் கழகம் சார்பில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பிரசார செயலாளர் அ.அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது கடமைகளை சரிவர செய்யாமல், பா.ஜ.க. அரசின் கொள்கை பரப்பு செயலாளர் போல நடந்து கொள்கிறார். தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மக்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுக்க செயல்திட்டங்களை தீட்டி தமிழக அரசு சட்டமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றுகிறது. ஆனால் அந்த மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பாமல், கவர்னர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறார். கவர்னர் தனது போக்கை மாற்றிக்கொள்ளவேண்டும். நிலுவையில் உள்ள 19 மசோதாக்களை உடனடியாக ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பிட வேண்டும். அதேவேளை சனாதனத்துக்கு ஆதரவாக அவர் தொடர்ந்து பேசி வரும் கருத்துகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டங்களை திராவிடர் கழகம் முன்னெடுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.