நன்னிலத்தில் தங்கி இருந்த கி.வீரமணிக்கு திடீர் உடல் நலக்குறைவு
பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நன்னிலத்தில் தங்கி இருந்த கி.வீரமணிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை திரும்பினார்.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நன்னிலத்தில் தங்கி இருந்த கி.வீரமணிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை திரும்பினார்.
கி.வீரமணி சுற்றுப்பயணம்
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'சமூகநீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு திருவாரூர் மாவட்டம் நன்னிலத்துக்கு வந்தார். அங்கு நடந்த சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு இரவு 9.50 மணி வரை பேசினார்.
உடல் நலக்குறைவு
நாகை மாவட்டம் திருமருகல், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் ஆகிய பகுதிகளில் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக கி.வீரமணி நன்னிலத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் நேற்று முன்தினம் இரவு தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருமருகல், காரைக்கால் பகுதியில் நேற்று நடைபெற இருந்த பொதுக்கூட்டங்களை ரத்து செய்துவிட்டு நன்னிலத்தில் இருந்து தனது பிரசார பயண வாகனத்தில் உடனடியாக சென்னைக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டு சென்றார்.