பாசன வாய்க்காலில் கழிவுநீர் விடுவதை தடுக்க கோரி மனு
பாசன வாய்க்காலில் கழிவுநீர் விடுவதை தடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது.
தெப்பக்குளத்தை தூர்வார வேண்டும்
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது பெரம்பலூர் தாலுகா அம்மாபாளையம் கிராம மக்களின் சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுவில், கிராமத்தில் உள்ள நல்ல தண்ணீர் தெப்பக்குளத்தில் மண் கொட்டப்பட்டு வருகிறது.
கொட்டப்பட்ட மண்ணை அள்ளி, தெப்பக்குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும், கிராம சபை கூட்டத்திலும் மனு கொடுத்தும் இதுவரைக்கும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் வருகிற 19-ந்தேதி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம், என்று கூறப்பட்டிருந்தது.
விவசாயம் பாதிப்பு
வேப்பந்தட்டை தாலுகா, மரவநத்தம் கிராம விவசாயிகள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், கல்லாற்றில் இருந்து வி.களத்தூர் ஏரிக்கு வரும் வரத்து வாய்க்காலில் இருந்து பிரிந்து மரவநத்தம் கிராம விவசாய நிலத்திற்கு வரும் கண்ணு வாய்க்காலில் ஒரு சமூகத்தை சேர்ந்த மக்கள் வாய்க்கால் அமைத்து கழிவுநீரை விடுகின்றனர். கழிவுநீரால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே உரிய விசாரணை நடத்தி அந்த கழிவுநீர் வாய்க்காலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுக்களில், மாவட்டத்தில் உள்ள சிறுபாசன ஏரிகளை தூர்வாரி, அவற்றில் பழுதடைந்துள்ள மதகுகளை சீரமைக்க வேண்டும். மருதையாறு மற்றும் அதன் கிளை ஓடைகளை முறையாக சீரமைக்க வேண்டும். சேதமடைந்துள்ள பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும். குன்னம் தாலுகா கீ.புதூர் கிராமத்தில் இருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கூட்டத்தில் மொத்தம் 215 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.