பருவமழைக்கு முன்பு சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும்
பழனியில், பருவமழைக்கு முன்பு சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
நகராட்சி கூட்டம்
பழனி நகராட்சி கூட்டம் நேற்று அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். ஆணையர் பாலமுருகன், பொறியாளர் ராஜவேலு, நகர்நல அலுவலர் மனோஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-
சரவணன் (தி.மு.க.): நகராட்சி குப்பைக்கிடங்கில் தீப்பிடித்து வெளியேறும் புகைமூட்டத்தால் பொதுமக்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு நிரந்த தீர்வு காணவேண்டும்.
நகர்நல அலுவலர்: குப்பைக்கிடங்கில் வரும் நாட்களில் அங்கு கண்ணாடி, பிளாஸ்டிக் குப்பைகளை பிரித்து கொட்டவும், தீயை அணைக்க தண்ணீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதேபோல் தீவிபத்து குறித்து போலீசிலும் புகார் கொடுக்கப்படும்.
சாக்கடை தூர்வார
பத்மினி முருகானந்தம் (காங்கிரஸ்): கவர்னர் ஆர்.என்.ரவி பழனிக்கு வந்தபோது பல சாலைகளில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டது. எனவே அதை மீண்டும் அமைக்க வேண்டும்.
தலைவர்: சாலைகளில் வேகத்தடை அமைப்பது பற்றி தீர்மானம் நிறைவேற்றி நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பப்படும்.
ஜென்னத்துல் பிர்தவுஸ் (அ.தி.மு.க.): காந்திரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்: காந்திரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளதால் நெரிசல் ஏற்படுகிறது. எனவே போலீஸ்துறையிடம் தெரிவித்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
முருகேசன் (விடுதலை சிறுத்தைகள்): எங்கள் வார்டு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களில் குப்பைகள் படிந்து தூர்ந்து கிடக்கிறது. எனவே மழைக்காலத்துக்கு முன்பு நகரில் உள்ள அனைத்து சாக்கடை கால்வாய்களையும் தூர்வார வேண்டும்.
இந்த கோரிக்கையை கவுன்சிலர்கள் அனைவரும் வலியுறுத்தினர்.
தலைவர்: வடகிழக்கு பருவமழைக்கு முன்பு அனைத்து வார்டுகளிலும் சாக்கடை கால்வாய்களை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறேன்.
இவ்வாறு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவாதங்கள் நடைபெற்றது.
பின்னர் கூட்டத்தில் நகராட்சியில் புதிதாக குடிநீர் தொட்டி, கழிப்பறை கட்டிடம் கட்டுவது உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.