வரைவு வாக்குச்சாவடி பட்டியல்:கலெக்டர் வெளியிட்டார்
விழுப்புரம் மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்ட கலெக்டர், முன்னேற்பாடுகள் குறித்து அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி மையங்கள் இடமாற்றம், பெயர் மாற்றம், புதிய வாக்குச்சாவடி அமைத்தல் தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டரும் தேர்தல் அலுவலருமான சி.பழனி தலைமை தாங்கி வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட அதனை அரசியல் கட்சியினர் பெற்றுக்கொண்டனர். அதன் பின்னர் கலெக்டர் சி.பழனி கூறியதாவது:-
1,962 வாக்குச்சாவடிகள்
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வரைவு வாக்குச்சாவடி மையங்கள் இடமாற்றம், பெயர் மாற்றம், புதிய வாக்குச்சாவடி அமைப்பதற்கு ஏதுவாக இந்த முன்னேற்பாடு கூட்டம் நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி சட்டமன்ற தொகுதியில் 304 வாக்குச்சாவடிகளும், மயிலம் சட்டமன்ற தொகுதியில் 265 வாக்குச்சாவடிகளும், திண்டிவனம் (தனி) சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குச்சாவடிகளும், வானூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 277 வாக்குச்சாவடிகளும், விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் 289 வாக்குச்சாவடிகளும், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளும், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் 286 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,962 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளது.
நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் 1500-க்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்டுள்ள பாகங்களை இரண்டு பாகங்களாக பிரிக்கவும், அனைத்து வாக்குச்சாவடிகளும் இருபாலர்களுக்கான வாக்குச்சாவடிகளாக இருப்பதை உறுதி செய்யவும் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே உள்ள வாக்குச்சாவடி மையங்கள் ஏதேனும் பழுதடைந்த நிலையிலோ அல்லது பழமையான கட்டிடமாக இருக்கும்பட்சத்தில் அருகில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட வேறு இடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு பள்ளி, தனியார் பள்ளி கட்டிடம், அரசு கட்டிடங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரிடம் ஒப்புதல் பெற்று முன்மொழிவுகள் அனுப்பி வைக்க வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
புகார்கள் ஏதும் எழாத வகையில் பணி
வாக்காளர் ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கும் மற்றும் 2 அல்லது 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 1500-க்கும் குறைவாக இருந்தாலும் அங்கு புதிய வாக்குச்சாவடிகள் தோற்றுவிப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுதல் அதன் விவரங்களை உடனே சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் வாக்குச்சாவடி மையங்கள் தொடர்பான புகார்கள் ஏதும் எழாத வண்ணம், வாக்குச்சாவடி மையங்களை தேர்வு செய்து முன்மொழிவுகள் அனுப்ப வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும் ஒத்துழைப்பு நல்கவும், இதில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 7 நாட்களுக்குள் தங்கள் ஆட்சேபனை அல்லது கருத்துருக்களை சம்பந்தப்பட்ட சப்-கலெக்டர், கோட்டாட்சியர், தாசில்தார்களிடம் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ஹரிதாஸ் (பொது), செந்தில்குமார் (தேர்தல்), தேர்தல் பிரிவு தனி தாசில்தார் கோவர்தனன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.