5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்-கலெக்டர் சாந்தி வெளியிட்டார்


5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்-கலெக்டர் சாந்தி வெளியிட்டார்
x

தர்மபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் சாந்தி வெளியிட்டார்.

தர்மபுரி

வரைவு வாக்குச்சாவடி

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தர்மபுரி மாவட்டத்தில் புதிய பாகங்கள் அமைத்தல், வாக்குச்சாவடியை இடமாற்றம் செய்தல், வாக்குச் சாவடியை வேறு கட்டிடத்திற்கு மாறுதல் செய்தல் மற்றும் வாக்குச்சாவடி பெயர் திருத்தம் செய்தல் போன்ற மறுசீரமைப்புபணிகளை மேற்கொள்வது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சாந்தி தலைமை தாங்கி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்குச்சாவடி பட்டியல் - 2022-ன்படி, தர்மபுரி மாவட்டத்திற்குட்பட்ட பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் 267 வாக்குசாவடிகளும், பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் 293 வாக்குசாவடிகளும், தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குசாவடிகளும், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 314 வாக்குசாவடிகளும் மற்றும் அரூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 299 வாக்குசாவடிகளும் என மொத்தம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 1,479 வாக்குச்சாவடிகள், 860 வாக்குச்சாவடி மையங்களில் அமைந்துள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்தாலோ, புதிதாக வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டியிருந்தாலோ இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி அந்தந்த சட்டமன்ற தொகுதியின் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் அதன் விவரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை மனுக்களாக வருகிற 7-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நேரில் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புதிய வாக்குச்சாவடி

வாக்குச்சாவடியில் இருந்து 2 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் இருந்தால், புதிய வாக்குச்சாவடி அமைப்பது குறித்தும், வாக்குச்சாவடிகள் பிரிக்க வேண்டிய சூழ்நிலையில், அனைத்து வாக்காளருக்கான வாக்குச்சாவடிகளாக அமைப்பது குறித்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அந்தந்த சட்டமன்ற தொகுதியின் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் அதன் விவரங்களை கோரிக்கை மனுக்களாக வழங்கிடலாம்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்த கூட்டத்தில் தர்மபுரி உதவி கலெக்டர் சித்ரா விஜயன், அரூர் உதவி கலெக்டர் விஸ்வநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனிதேவி, தேர்தல் தனி தாசில்தார் சவுகத் அலி மற்றும் தாசில்தார்கள், தேர்தல் துணை தாசில்தார்கள், மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story