நீலகிரி மலை ஆடுகளை பாதுகாக்க வரையாடு திட்டம்: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி மலை ஆடுகளை பாதுகாக்க வரையாடு திட்டம் என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை,
'வரையாடு' என்று மக்களால் பரவலாக அழைக்கப்படும் 'நீலகிரி வரையாடு' மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் அழிந்து வரும் இனமாகும்.
இது புவி ஈர்ப்பு விசைக்கெதிராக கடினமான குன்றின் மீது ஏறும் திறன்களுக்காக புகழ் பெற்றது. இந்த மலை ஆடுகளை 'மவுண்டன் மோனார்க்' என அழைக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அதன் சுற்றுச்சூழல் மற்றும் கலாசார முக்கியத்துவத்திற்கு சான்றாக நீலகிரி வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி வரையாடுகளை பாதுகாக்க தமிழக அரசால் நீலகிரி வரையாடு திட்டம் என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார்.
இந்த திட்டம் ரூ.25 கோடி செலவில் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை, அவற்றின் வரலாற்று வாழ்விடங்களை மீண்டும் அறிமுகப்படுத்துதல், வரையாட்டுக்கான அச்சுறுத்தலை நிவர்த்தி செய்தல், நீலகிரி வரையாடு உள்ள இடங்களில் சுற்றுலா நடவடிக்கைகளை உருவாக்குதல்,
நீலகிரி வரையாடு குறித்த பாடங்களை உருவாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் அலுவலகம்
நீலகிரி வரையாடு திட்டப்பணிகளை செயல்படுத்த கோவையில் திட்ட அலுவலகம் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி, கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் நாகநாதன், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் ராமசுப்பிரமணியன், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், நீலகிரி வரையாடு பற்றிய குறும்படத்தை தயாரித்த பிரவீன் சண்முகானந்தம், தனுபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.