வரைவு வாக்காளர் பட்டியல்; கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டார்


வரைவு வாக்காளர் பட்டியல்; கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டார்
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் நேற்று வெளியிட்டார்.

தென்காசி

தென்காசி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் நேற்று வெளியிட்டார்.

வரைவு வாக்காளர் பட்டியல்

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டார்.

இதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளான தென்காசி நகர தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ராமராஜ், அ.தி.மு.க. முன்னாள் நகர சபை கவுன்சிலர் கசமுத்து, பா.ஜனதா அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் குத்தாலிங்கம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் கலெக்டர் ஆகாஷ் கூறியதாவது:-

13 லட்சம் வாக்காளர்கள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1-1-2023-ம் நாளினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 2023-ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் 1,17,799 ஆண் வாக்காளர்களும், 1,24,478 பெண் வாக்காளர்களும், 7 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,42,284 வாக்காளர்களும் உள்ளனர்.

வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் 1,15,839 ஆண் வாக்காளர்களும், 1,20,663 பெண் வாக்காளர்களும், 4 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,36,506 வாக்காளர்களும் உள்ளனர்.

கடையநல்லூர் தொகுதியில் 1,40,768 ஆண் வாக்காளர்களும், 1,43,279 பெண் வாக்காளர்களும், 4 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2,84,059 வாக்காளர்களும் உள்ளனர்.

தென்காசி தொகுதியில் 1,41,892 ஆண் வாக்காளர்களும், 1,48,109 பெண் வாக்காளர்களும், 62 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2,90,063 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் 1,26,078 ஆண் வாக்காளர்களும், 1,33,954 பெண் வாக்காளர்களும், 9 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2,60,041 வாக்காளர்கள் உள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 6,42,376 ஆண் வாக்காளர்களும், 6,70,483 பெண் வாக்காளர்களும், 94 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 13,12,953 வாக்காளர்கள் உள்ளனர்.

மாற்றங்கள் செய்ய ஏற்பாடு

வாக்காளர் பட்டியலில் புதிதாக பதிவு செய்வதற்கு மற்றும் ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்வதற்கு படிவம்-6, இந்திய கடவுச்சீட்டு வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பதிவு செய்வதற்கு படிவம் 6ஏ, ஏற்கனவே பதிவு செய்துள்ள பெயரை நீக்கம் செய்வதற்கு அல்லது வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் சேர்ப்பு குறித்து ஆட்சேபனை தெரிவிக்க படிவம் 7, வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை மாற்றம் அல்லது திருத்தம் செய்வதற்கு சட்டமன்றத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்வதற்கு படிவம் 8, விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.

ஜனவரி 1-2023 அன்று அல்லது அதற்கு முன்பு 18 வயது பூர்த்தி அடைந்த வாக்குச்சாவடி பகுதியில் சாதாரணமாக வசித்து வரும் இந்திய குடிமக்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர். டிசம்பர் 9-ந் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி மையங்கள், தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து நேரடியாக அளிக்கலாம். அல்லது www.NVSP.in என்ற இணையதள முகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம். கைபேசியில் VHA செய்தி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வருகிற 12, 13, 26, 27-ந் தேதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவத்துடன் வயது மற்றும் முகவரிக்கான ஆதாரங்களை இணைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைக்கலாம். பெறப்படும் விண்ணப்ப படிவங்கள் மீது உரிய விசாரணைகள் மேற்கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி 5-ந் தேதி அன்று வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், தென்காசி உதவி கலெக்டர் கங்காதேவி, தாசில்தார் (தேர்தல்) கிருஷ்ணவேலன், நகராட்சி ஆணையாளர்கள், தாசில்தார்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story