முட்டம் இரட்டைக்கொலை தலைமறைவான கஞ்சா வியாபாரிகள் 4 பேருக்கு தொடர்பு


முட்டம் இரட்டைக்கொலை  தலைமறைவான கஞ்சா வியாபாரிகள் 4 பேருக்கு தொடர்பு
x

முட்டம் இரட்டைக்கொலையில் தலைமறைவான கஞ்சா வியாபாரிகள் 4 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற ரீதியில் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்:

முட்டம் இரட்டைக்கொலையில் தலைமறைவான கஞ்சா வியாபாரிகள் 4 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற ரீதியில் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய், மகள் கொலை

குமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்த பவுலின் மேரி (வயது 48) மற்றும் அவரது தாயார் திரேசம்மாள் (90) ஆகிய 2 பேரும் வீட்டில் இருந்த போது ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 15 பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டது.

குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டைக்கொலையில் 5 நாட்களாகியும் கொலையாளிகள் யாரென்று இதுவரை துப்பு துலங்கவில்லை.

4 தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்மஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்தனர். மேலும் இந்த கொலையில் வடமாநில தொழிலாளர்கள், கஞ்சா பயன்படுத்தும் கும்பல் என ஏராளமானோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா வியாபாரிகளுக்கு தொடர்பு?

கொலை நடந்த பகுதியில் மப்ளரும், ஒரு அயன்பாக்சும் கைப்பற்றப்பட்டது. கொலையாளிகள் இதனை பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது. ஆனாலும் இரட்டைக்கொலையில் முன்னேற்றம் இல்லை.

இதனை தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன், கொலையாளிகளை பற்றி ரகசிய தகவல் தருவோருக்கு தக்க சன்மானம் தருவதாக அறிவித்தார்.

இதற்கிடையே கஞ்சா வியாபாரிகள் 4 பேர் கொலை நடந்ததில் இருந்து தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதனால் அவர்களை பிடித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதன்பிறகு கொலை வழக்கின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் நேரில் ஆறுதல்

இதற்கிடையே படுகொலை செய்யப்பட்ட பவுலின் மேரி, திரேசம்மாள் வீட்டுக்கு அமைச்சர் மனோதங்கராஜ் நேரில் சென்றார். அங்கு பவுலின் மேரியின் கணவர் மற்றும் மகன்களிடம் ஆறுதல் கூறினார்.

அப்போது உறவினர்கள், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாவிட்டால் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், முட்டத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க துரித நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளை கேட்டு கொண்டுள்ளேன்.

எனவே சி.பி.ஐ. விசாரணை அவசியமில்லை. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story