இரட்டை மாட்டுவண்டி பந்தயம்


இரட்டை மாட்டுவண்டி பந்தயம்
x

முத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

தேனி

கூடலூர் கிழக்கு முத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நேற்று நடந்தது. இதற்கான தொடக்க விழாவுக்கு ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்க பொருளாளர் டி.கே.செல்வராஜ் தலைமை தாங்கினார். மகாராஜன் எம்.எல்.ஏ., கூடலூர் நகர தி.மு.க.செயலாளர் லோகந்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போட்டியை என்.ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக போட்டிகளில் பங்கேற்க இருந்த காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதன் பிறகு கூடலூரில் இருந்து போட்டி தொடங்கியது.

தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் மாடு, நடுமாடு, பெரியமாடு ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தது. இதில் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 177 பேர் மாட்டுவண்டி, காளைகளுடன் போட்டியில் பங்கேற்றனர். காளைகளின் வயது, தூரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு போட்டி நடத்தப்பட்டது.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதன்படி மொத்தம் 15 பேர் பரிசுகளை பெற்றனர். கூடலூர் -லோயர்கேம்ப் தேசிய நெடுஞ்சாலையில் மாட்டுவண்டிகளுடன் சீறிப் பாய்ந்த காளைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை, கூடலூர் ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்கம் மற்றும் விவசாய இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.


Next Story