இரட்டை மாட்டு வண்டி பந்தயம்


இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 6 April 2023 12:30 AM IST (Updated: 6 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

தேனி

கூடலூரில் காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டுவண்டி பந்தயம் கூடலூர்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது. போட்டியை, கோவில் கமிட்டி தலைவர் ராஜா தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். இதில் பெரிய மாடு, நடுமாடு, கரிச்சான் ஜோடி, பூஞ்சிட்டு ஜோடி ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தன. போட்டியில் தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 120 ஜோடி மாட்டுவண்டிகள், காளைகளுடன் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

காளைகளின் வயது, தூரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு போட்டி நடத்தப்பட்டது. குறிப்பாக பெரிய மாடு பிரிவுக்கு கூடலூரில் இருந்து லோயர்கேம்ப் பகவதி அம்மன் கோவில் வரை போட்டிக்கான தூரம் நிர்ணயிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களைப் பிடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இவர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம், ரூ.15 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது. மாட்டு வண்டிகளுடன் சீறி பாய்ந்த காளைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story