'காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போட வேண்டாம்' - நடிகர் விஜய் அறிவுரை


காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போட வேண்டாம் - நடிகர் விஜய் அறிவுரை
x
தினத்தந்தி 18 Jun 2023 5:58 AM IST (Updated: 18 Jun 2023 6:01 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. - பிளஸ்-2 தேர்வுகளில் முதல் 3 இடங்கள் பிடித்து சாதனை படைத்த 1,500 மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் ரொக்கப்பரிசு வழங்கினார்.

சென்னை,

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் கடந்த கல்வி ஆண்டில் தொகுதி அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை கவுரவிக்க நடிகர் விஜய் விரும்பினார்.

கல்வி விருது வழங்கும் விழா

இதனைத்தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் மூலமாக தமிழகம் முழுவதும் சட்டசபை தொகுதி வாரியாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் முதல் 3 இடங்கள் பிடித்த 1,500 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

சாதனை மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா, சென்னை நீலாங்கரையில் நேற்று காலை நடந்தது.



நந்தினிக்கு வைர நெக்லஸ்

இதில் பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் சால்வை அணிவித்து, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

அத்துடன் சிறப்பு பரிசாக ஒரு வைர நெக்லசும், கல்வி உதவித் தொகையாக ரூ.2½ லட்சமும் வழங்கப்பட்டது. அந்த வைர நெக்லசை நந்தினிக்கு, அவரது தாயாரே மேடையில் அணிவித்தார். அதனைத்தொடர்ந்து 5 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழுடன், தலா ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகையை விஜய் வழங்கினார்.

மற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழுடன், தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. அனைத்து மாணவ-மாணவி களுக்கும் நடிகர் விஜய் தனது கையால் சால்வை அணிவித்து கவுரவித்தார்.



நடிகர் விஜய் பேச்சு

முன்னதாக விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:-

ஏதோ ஒரு பொறுப்புணர்ச்சி வந்தது போல உணருகிறேன். நான் நடிகன் ஆகவில்லை என்றால் அதுவாக ஆகியிருப்பேன், இதுவாக ஆகியிருப்பேன், டாக்டராக ஆகியிருப்பேன் என்றெல்லாம் சொல்லி போரடிக்க விரும்பவில்லை. என் கனவெல்லாம் சினிமா, நடிப்புதான். அதை நோக்கிதான் என் பயணம் போய்க்கொண்டிருக்கிறது. ஒருவேளை... சரி அதை விடுங்க... அது இப்போ எதுக்கு...

'காடு இருந்தா எடுத்துப்பாங்க... ரூபாய் இருந்தா பிடுங்கிப்பாங்க... ஆனால் படிப்பை மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது' என்று ஒரு படத்தில் 'டயலாக்' வரும். இது என்னை மிகவும் பாதித்த வரிகள். ஏனெனில் இதுதான் எதார்த்தம். அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கு என் பங்குக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று நீண்ட நாளாகவே யோசித்துக்கொண்டிருந்தேன். அதுக்கான நேரம்தான் இது.



நம் வாழ்க்கை நம் கையில்

முழுமையான கல்வி என்பது படித்து டிகிரி வாங்குவது மட்டும் ஆகாது. படித்த, கற்ற விஷயங்கள் எல்லாம் மறந்துபோகும்போது எஞ்சிய விஷயம் எதுவோ, அதுவே கல்வி என்றார் ஐன்ஸ்டீன். முதலில் இது புரியவில்லை. ஆனால் போகப்போக புரிந்தது. அப்படி படித்த, கற்ற விஷயங்களை நீக்கி பார்த்தால் நம்மிடம் எஞ்சியிருப்பது குணங்களும், சிந்திக்கும் திறனும்தான். இவை இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்போது முழுமையான கல்வியாகவே அது மாறுகிறது.

பணத்தை இழந்தால் ஒன்றும் இழக்கவில்லை. ஆரோக்கியத்தை இழந்தால் எதையோ ஒன்றை இழக்கிறீர்கள். ஆனால் குணத்தை இழந்தால் எல்லாவற்றையும் இழக்கிறீர்கள் என்பதுதான் உண்மை. இத்தனை நாட்கள் பெற்றோர் கட்டுப்பாட்டில் இருந்த நீங்கள், இனி மேல்படிப்புக்காக வேறு ஊர்களுக்கு சென்று படிப்பீர்கள். விடுதிகளில் தங்கி படிப்பீர்கள். புதிய நட்புகள் கிடைக்கும். முதல் தடவையாக பெற்றோர் கண்காணிப்பை தாண்டி, வேறு ஒரு வாழ்க்கைக்கு போகும்போது, அங்கு ஒரு சுதந்திரம் கிடைக்கும். அந்த சுதந்திரத்தை, சுய ஒழுக்கத்துடன் பார்த்து கையாளுங்கள். வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழுங்கள். அதேவேளை உங்கள் தனித்தன்மையை எந்த இடத்திலும் விட்டுக்கொடுத்து விடாதீர்கள். நம் வாழ்க்கை நம் கையில்தான் என்பதை அவ்வப்போது நினைவில் கொள்ளுங்கள்.



காசுக்கு ஓட்டுப்போட வேண்டாம்

தற்போதைய காலம், தகவல் தொழில்நுட்ப காலம். சமூக வலைதளங்களில் வரும் முக்கால்வாசி தகவல் பொய்யானவைதான். எனவே எதையுமே யோசித்து பார்த்து அணுகி ஆராய வேண்டும். இந்த விஷயங்களை தெரிந்துகொள்ள, உங்கள் பாடப்புத்தகங்களை தாண்டி நீங்கள் படிக்க வேண்டும். முடிந்தவரை படியுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு தேவையற்றதை விட்டுவிடுங்கள்.

நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய, நல்ல தலைவர்களை தேர்வு செய்யப்போகிறீர்கள். ஆனால் நம்ம விரல வச்சு நம்ம கண்ணையே குத்துறதை கேள்வி பட்டதுண்டா? அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதைத்தான் இப்போது நாமும் செய்துகொண்டிருக்கிறோம். என்னவென்றால், பணம் வாங்கி ஓட்டு போடுவது. ஒரு ஓட்டுக்கு ரூ.1,000 என்று வைத்துக்கொள்வோம். ஒரு தொகுதிக்கு 1½ லட்சம் பேருக்கு பணம் கொடுக்கிறார்கள். ரூ.15 கோடி செலவு ஆகியிருக்குமா? ஒருத்தர் ரூ.15 கோடி செலவு செய்கிறார் என்றால், அதற்கு முன்னாடி எவ்வளவு சம்பாதித்திருப்பார்? இதையெல்லாம் யோசித்து பாருங்கள். இதெல்லாம் மாணவர்களுக்கு கற்றுத்தரப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாணவ-மாணவியரும் தங்கள் பெற்றொரிடம் இனிமேல் காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க... அப்படின்னு சொல்லி பாருங்கள். சும்மா... முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் முயற்சித்தால் அது கண்டிப்பாக நடக்கும். ஏனெனில் வரும் ஆண்டுகளில் நீங்கள் முதல் தலைமுறை வாக்காளர்களாக வரப்போகிறீர்கள். இதெல்லாம் எப்போது நடக்குமோ, அப்போதுதான் உங்கள் கல்வி முறையே முழுமை அடைவதாக எடுத்துக்கொள்ளலாம்.



தவறான முடிவு எடுக்காதீர்கள்

இன்னொரு சிறிய வேண்டுகோள். உங்கள் அருகே வசிக்கும் தேர்வில் வெற்றிபெறாத மாணவர்களிடம் பேசி தைரியம் கொடுங்கள். நீங்கள் கொடுக்கும் தைரியத்தில் அவர்கள் வெற்றி அடைந்தால், அது நீங்கள் எனக்கு தரும் பரிசாக நினைத்து கொள்வேன். எந்த சூழ்நிலையிலும் மாணவர்கள் தவறான முடிவு எடுக்காமல், வாழ்க்கையில் முன்னேறி செல்ல வேண்டும்.

உன்னால் இது முடியாது என்று மட்டுப்படுத்தும் ஒரு கூட்டம் இருக்கும். அதை கண்டுக்கவே கண்டுக்காதீங்க. உனக்குள் ஒருவன் இருப்பான், அவன் சொல்வதை கேட்டு செய்யுங்கள். வளர்ப்போம் கல்வி என்று நடிகர் விஜய் பேசினார்.




நடிகர் விஜய்யும் களைப்பின்றி தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களையும், ஊக்கத்தொகையையும் வழங்கினார். மொத்தம் 1500 பேர் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் அனைவருக்கும் சான்றிதழ்களை விஜய் வழங்கினார்.

இரவு 12 மணிக்கும் மேலாக நீட்டித்த இந்த நிகழ்வு நிறைவுபெற்றது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கைகூப்பி வணக்கம் தெரிவித்த நடிகர் விஜய், இறுதியாக வாரிசு பட பாடலின் ரஞ்சிதமே ஸ்டைலில் முத்தம் கொடுத்து விழாவை நிறைவு செய்தார்.



Next Story