அரசின் விலையில்லா சைக்கிளை விற்கக்கூடாது: மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்


அரசின் விலையில்லா சைக்கிளை விற்கக்கூடாது: மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்
x

தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா சைக்கிளை மாணவ-மாணவிகள் விற்பனை செய்யக்கூடாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இதற்கான விழா சென்னை திருவல்லிக்கேணி பெசன்ட் சாலையில் உள்ள என்.கே.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 10 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செஞ்சி மஸ்தான், கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ரூ.234 கோடி மதிப்பீட்டில்...

விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் கிட்டத்தட்ட 5 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு ரூ.234 கோடி மதிப்பீட்டில் இந்த விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் முதற்கட்டமாக 400 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கி இந்த திட்டம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் மூலம் விலையில்லா சைக்கிள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. மாணவ-மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும். கல்விக்கு இந்த சைக்கிள் உதவியாக இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆண்டுந்தோறும் இதனை வழங்கி வருகிறோம்.

இதை நீங்கள் (மாணவ-மாணவிகள்) இலவசமாக பார்க்க கூடாது. கல்விக்கு கிடைத்திருக்கக்கூடிய உரிமையாக பார்க்க வேண்டும். பள்ளி கல்வித்துறைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவர் எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் கடைசியில் கூறும் ஒரு அறிவுரை, 'பறிக்க முடியாத ஒரே செல்வம் கல்வி மட்டும்தான்' என்று கூறுவார். எனவே மாணவ-மாணவிகள் எதை பற்றியும் கவலைப்படாமல் கல்வியில் மட்டும் முழு கவனம் செலுத்த வேண்டும்.

உங்களுக்கு தாயாக, தந்தையாக எப்போதும் திராவிட மாடல் அரசும், முதல்-அமைச்சரும் துணையாக இருப்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

சைக்கிளை விற்க கூடாது

பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி:- மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா சைக்கிள்கள் விற்பனை செய்யப்படக்கூடிய சூழல் இருக்கிறதே...

பதில்:- இதை மாணவ-மாணவிகள் தவிர்க்க வேண்டும். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

கேள்வி:- தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமை தொகை 80 சதவீத பெண்களுக்கு கிடைக்காது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளாரே...

பதில்:- 9 ஆண்டுகளுக்கு முன்பு எல்லோருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்று சொன்னார்களே, 15 ரூபாயாவது கொடுத்தார்களா?, அவருக்கு இதையெல்லாம் கேட்பதற்கு ஒரு அருகதை வேண்டும்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

உருண்டே வந்தாலும்...

அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன், 'அவர் (அண்ணாமலை) உருண்டே வந்தாலும் தமிழ்நாட்டில் ஒரு பதவியையும் பிடிக்க முடியாது' என்று கூறினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மேயர் பிரியா எங்கே? என்று கேட்ட மாணவன்

விழாவில் விலையில்லா சைக்கிள் பெற்ற மாணவ-மாணவிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குழு புகைப்படம் எடுக்க சென்றார். அப்போது அவரிடம் ஒரு மாணவன் 'மேயர் மேடம் வரவில்லையா?' என்று வெகுளியாக கேட்டான்.

உடனே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சற்று தொலைவில் நின்றுக் கொண்டிருந்த மேயர் பிரியாவை அழைத்தார். அவரும் வேகமாக வந்தார். அப்போது அந்த மாணவனின் தோளை தட்டி தம்பி, 'மேயர் வந்துட்டாங்க' என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். பின்னர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பின்னர், அந்த மாணவன் மேயர் பிரியாவை பார்த்து, 'உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை' என்று கூறினான். இதைக்கேட்டு மேயர் பிரியா வெட்கப்பட்டு சிரித்தார். இந்த சம்பவம் விழாவை ருசிகரமாக்கியது.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக மட்டுமின்றி நடிகராகவும் இருப்பதால் அவருக்கு மாணவ-மாணவிகள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.


Next Story