மக்களை கொல்லும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டே வேண்டாம் -அமைச்சர் ரகுபதி பேட்டி


மக்களை கொல்லும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டே வேண்டாம் -அமைச்சர் ரகுபதி பேட்டி
x

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 28 சதவீதம் வரி போட்டு வாங்குவது பாவப்பட்ட பணம் என்றும், மக்களை கொல்லும் விளையாட்டே வேண்டாம் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தொடர்பான வழக்கு தற்போது சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசுக்கு இந்த சட்டத்தை இயற்ற அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு வாதிட்டுள்ளது. இதற்கு முன்பு இதே சட்டத்தை முந்தைய அ.தி.மு.க. அரசு இயற்றியபோதும் அதுபற்றி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அது ஒரு திருத்தச் சட்டம் என்று கூறி ஐகோர்ட்டு அந்த சட்டத்தை ரத்து செய்தது.

ஐகோர்ட்டு கூறியுள்ள கருத்துகளையும் சேர்த்து சட்டம் இயற்றுவதில் ஆட்சேபனை இல்லை என்று அந்தத் தீர்ப்பில் ஐகோர்ட்டு தெரிவித்து இருந்தது. ஆனால் சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று கூறி அந்த வழக்கில் மத்திய அரசு அப்போது முறையீடு செய்யவில்லை.

கண்டனம்

ஆனால் இப்போது, தமிழக அரசுக்கு இந்த சட்டத்தை இயற்ற அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு வக்கீல் வாதிட்டு, இதே விவகாரத்தில் மத்திய அரசு சட்டம் இயற்றி இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் தகவல் தொடர்பு தொழில்நுட்ப சட்டத்தில் மத்திய அரசு சில விதிகளைத்தான் கொண்டு வந்துள்ளதே தவிர இதற்கென்று தனி சட்டத்தை மத்திய அரசு இயற்றவில்லை.

அந்த விதியும், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு உரிமையாளர்களை பாதுகாக்கும் விதமாகத்தான் அமைந்துள்ளது. அதோடு மத்திய அரசுக்கு வருவாயை ஏற்படுத்தும் வகையில் அது உள்ளது. அது மக்களுக்கு பாதுகாப்பான விதிகளாக இல்லை. சூதாட்டம் ஒரு கொடிய நோய் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இதனால் 40-க்கும் மேற்பட்ட தற்கொலைகள் நடந்த பின்னரும் அதை கருத்தில் கொள்ளாமல் ஆன்லைன் விளையாட்டு மூலம் வருவாய் ஏற்படும் வகையில் விதிகளை திருத்திவிட்டு, சட்டம் கொண்டு வந்துவிட்டதாக மத்திய அரசு கூறுகிறது. இதில் மத்திய அரசு சட்டம் கொண்டு வரவில்லை. இது கண்டிக்கத்தக்கது. நோயை தடுக்காமல் அதை பரப்புகின்றனர்.

விளையாட்டில் வித்தியாசம்

அரசியல் அமைப்பு சாசனத்தில் பொதுப்பட்டியல், மத்திய அரசு பட்டியல் மற்றும் மாநில அரசுப் பட்டியல் இடம்பெற்றுள்ளன. மாநில அரசுப் பட்டியலில் சூதாட்ட விளையாட்டு இடம் பெற்றுள்ளதால்தான் மாநில அரசு தனது உரிமையுடன் அதில் சட்டம் இயற்றியுள்ளது.

'ரம்மி' விளையாட்டை திறன் விளையாட்டு என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. ஆனால் அது மக்கள் நேரடியாக உட்கார்ந்து ஆடும் ரம்மி விளையாட்டு ஆகும். தமிழக அரசு இயற்றிய சட்டம், ஆன்லைன் ரம்மி விளையாட்டு பற்றியது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 2 பேர் ரம்மி விளையாடினால், 3-வதாக 'புரோகிராமர்' என்ற மற்றொருவர் புகுந்து அந்த விளையாட்டை எப்படி வேண்டுமானாலும் மாற்றிவிட முடியும். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் என்னதான் திறமையுடன் விளையாடினாலும், இறுதியில் புரோகிராமர் புகுத்தி வைத்துள்ள முடிவுதான் ஜெயிக்கும்.

இதனால்தான் பலரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோற்று பணத்தை இழக்கின்றனர். எனவே 2 வகை ரம்மி விளையாட்டிலும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும். இதை உணர்ந்து மத்திய அரசு உரிய திருத்தங்களை கொண்டுவர வேண்டும்.

மாறுபட்ட கருத்து

ஆன்லைன் விளையாட்டுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு போடுகிறது. ஆனால் அப்படிப்பட்ட விளையாட்டே வேண்டாம், பாவப்பட்ட பணம் தேவையில்லை என்பதுதான் எங்கள் கருத்து. தெலுங்கானா உள்பட 2 மாநிலங்களில் ஏற்கனவே ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இந்த சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி கூறுகிறார். ஆனால் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று கோர்ட்டில் மத்திய அரசு வக்கீல் வாதிடுகிறார். மத்திய அரசு என்பது மாறுபட்ட கருத்துகளின் ஒட்டுமொத்த வடிவமாக உள்ளது.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு அரசு சார்பில் தமிழக கவர்னருக்கு எழுதிய பதில் கடிதம் அப்படியே இருக்கிறது. அவரிடம் இருந்து பதில் இன்னும் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story