சிங்கப்பெருமாள் கோவில் அருகே கன்று குட்டிகளை கடித்து கொன்றது சிறுத்தை அல்ல, நாய்கள்தான் - வனத்துறை
சிங்கப்பெருமாள் கோவில் அருகே வைக்கப்பட்ட கண்காணி்ப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கன்று குட்டிகளை கடித்து கொன்றது சிறுத்தை அல்ல நாய்கள்தான் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
சிறுத்தை நடமாட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள தென்மேல்பாக்கம் கிராமத்தில் பிரகாஷ் என்பவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 கன்றுக்குட்டிகளை மர்ம விலங்கு கடித்து கொன்றதாக வந்த தகவலின் பேரில் வருவாயத்துறையினர், கால்நடை டாக்டர், வனத்துறையினர் தென்மேல்பாக்கம் கிராமத்தில் முகாமிட்டு ஆய்வு செய்னர்.
மேலும் தென்மேல்பாக்கம் ஊராட்சி அருகே உள்ள அஞ்சூர் ஊராட்சியில் கடந்த 2014-ம் ஆண்டு சிறுத்தையின் கால் தடம் பதிவாகி உள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறியதன் பேரில் வனத்துறையின் ஆய்வு செய்து சிறுத்தையின் கால் தடமா? அல்லது காட்டு பூனையின் கால் தடமா? என்று நீண்ட ஆராய்ச்சிக்கு பிறகு ஒரு வழியாக சிறுத்தையின் நடமாட்டம்தான் என்று உறுதி செய்தனர்.
இதையடுத்து அஞ்சூர் பகுதி வனப்பகுதியில் ஆங்காங்கே கண்காணி்ப்பு கேமராக்கள் வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த கண்காணிப்பு கேமராவில் 100 கிலோ எடை கொண்ட சிறுத்தையின் நடமாட்டம் பதிவானதை உறுதிசெய்தனர். பின்னர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை வனத்துறையினர் எடுத்ததன் பேரில் இந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
நாய்கள் கடித்து கொல்வது பதிவானது
இந்த நிலையில் தென்மேல்பாக்கம் ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 கன்றுகுட்டிகள் மர்மமான முறையில் இறந்ததால் அவற்றை சிறுத்தை கடித்திருக்குமோ? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அந்த விலங்கை கண்காணிக்க வனத்துறை சார்பில் மாட்டின் உரிமையாளர் பிரகாஷ் வீட்டின் அருகே 2 கண்காணிப்பு கேரமாக்களை பொருத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் நேற்று முன்தினம் எதுவும் பதிவாகவில்லை.
இந்த சூழ்நிலையில் நேற்று அந்த கண்காணிப்பு கேமராவில் 4 அல்லது 5 நாய்கள் ஒன்றிணைந்து கண்காணிப்பு கேமாரா அருகே கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியை கடித்து கொல்வது பதிவாகி இருந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை கைப்பற்றி வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தென்மேல்பாக்கம் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இல்லை. நாய்கள் மட்டுமே கன்றுக்குட்டியை கொன்றுள்ளது உறுதியாகியுள்ளது எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாய்களை கட்டுப்படுத்த
இதுகுறித்து தென்மேல் பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் கூறுகையில்:-
எங்கள் ஊராட்சியில் 100-க்கம் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. அவைகள் தான் இந்த 3 கன்றுக்குட்டிகளை கடித்து கொன்றன என்பதை வனத்துறையின் தகவலின் பேரில் உறுதி செய்தோம். இதுபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்கள் ஊராட்சியில் 5 ஆடுகளை நாய்கள் கடித்து கொன்றன. அந்த நாய்களை விரட்டிச் சென்றால் விரட்டுபவர்களை அந்த நாய்கள் கடிக்க வருகின்றன. ஆகவே அந்த நாய்களை கட்டுப்படுத்த கால்நடை மருத்துவ குழுவுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.