இளைய சமுதாயத்துக்கு நூலகம் உதவுகிறதா? 'போட்டித்தேர்வுகளுக்கு போதுமான நூல்கள் இல்லை': மாணவர்கள்
இளைய சமுதாயத்தினர் அறிவாற்றலை பெருக்க நூலகங்கள் உதவுகின்றனவா? என்பது குறித்து சென்னையில் மாணவர்கள் கருத்துகளை தெரிவித்தனர். போட்டித் தேர்வுகளுக்கான போதுமான நூல்கள் இல்லை என்று சிலர் குறைபட்டு கொண்டனர்.
'நோய், நொடியின்றி நூறாண்டு வாழ்வதற்கு, உடலுக்கு எப்படி உடற்பயிற்சி அவசியமோ, அதுபோல மனப்பயிற்சிக்கு புத்தகம் வாசிப்பு என்பது மிக முக்கியமாகும்'. அதேபோல், வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம், சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்' என்ற விலை மதிப்பு மிக்க வார்த்தையை கூறியவர் நெல்சன் மண்டேலா. 'வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தகச் சாலைக்கு தரப்பட வேண்டும்' என்று அண்ணா கூறி உள்ளார். இவ்வாறு புத்தகங்களின் பெருமை பற்றியும், புத்தக வாசிப்பின் அருமை பற்றியும், நூலகங்களின் தேவை பற்றியும் பலரும் பலவாறு கருத்துகளை கூறுகின்றனர்.
பொதுவாக மாவட்டங்களை பொறுத்தவரையில் முழுநேரம், பகுதி நேர நூலகங்களும், கிளை, நடமாடும் நூலகங்களும் செயல்படுகின்றன. ஆனால், சென்னையில் எழும்பூர் கன்னிமாரா நூலகம், கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம், பெசன்ட்நகர் உ.வே.சாமிநாதய்யர் நூலகம், தரமணியில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகம் போன்றவை லட்சக்கணக்கான புத்தகங்களுடன் பழமையான மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நூலகங்களாக செயல்படுகின்றன. இதுதவிர சென்னை மாவட்டத்தில் 147 நூலகங்கள் இயங்குகின்றன.
படைப்பாற்றலை தூண்டுவதற்காக
மாணவர்களுக்கு இளம் பருவத்தில் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குவதுடன், இளைஞர்களிடையே படைப்பாற்றலை தூண்டுவது, கற்பனையை மேம்படுத்துவது. கலைகள், அறிவியல் சாதனைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க உதவுவது உள்ளிட்ட காரணங்களுக்காக, தகவல், எழுத்தறிவு, கல்வி மற்றும் கலாசார கருப்பொருளை மையமாகக் கொண்டு நூலகங்கள் தொடங்கப்படுகின்றன.
இவை அனைத்தும் சரியான பாதையில் செல்கிறதா? மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் எந்தவகையில் நூலகங்கள் உதவிகரமாக இருக்கின்றன. போட்டி தேர்வுகளை எழுத இருப்பவர்களுக்கு எந்தவகையில் நூலகங்கள் பயனுள்ள வகையில் இருக்கின்றன? என்பவை குறித்து மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் சந்தித்தபோது பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர்.
கூடுதல் அறை வேண்டும்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், வெளியில் இருந்து புத்தகங்களை கொண்டு வந்து படிக்கும் பிரிவில் படித்து வரும் மாணவர் ஆர்.அரிஹந்த் கூறும் போது, 'தணிக்கையாளர் துறையில் பணிக்கு செல்வதற்காக சி.ஏ. (சார்ட்டர் அக்கவுண்ட்ண்ட்) படிப்புக்கான தேர்வுக்கு பயின்று வருகிறேன். சி.ஏ. படிப்புகளை நடத்தும் மையங்கள் (இன்ஸ்டிடியூட்டுகள்) வெளியிடும் நூல்கள் இங்கு இல்லை. இங்கு காலை 6 முதல் 7 மணிக்குள் வந்து பெயர் முன்பதிய வேண்டும். முதலில் வருபவர்களுக்கு அறைகளில் இருக்கைகள் கிடைக்கிறது. சற்று காலதாமதமாக வந்தால் அறையில் இருக்கைகள் கிடைப்பதில்லை. கூடுதலான மாணவர்கள் அமரும் வகையில் அறைகள் ஒதுக்க வேண்டும்.
மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த கணித ஆசிரியை ஸ்வாதி நாயக் கூறும் போது, 'சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்று நாட்டில் எங்குமே இல்லை. மாறாக அனைத்து பிரிவு நூல்களும் இருக்கின்றன. கணிதம் தொடர்பாக சில புத்தகங்களை படிக்க வந்திருந்தேன். ஆனால் மின்சார விளக்குகள் போதிய வெளிச்சத்தில் இல்லாததால் என்னால் புத்தகத்தை வெகுநேரம் படிக்க முடியவில்லை. இது மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் நூல்கள் இருக்கும் அபூர்வ நூலகம்' என்றார்.
உணவக வசதி தேவை
மருத்துவத்துறையில் மேல்படிப்புக்கான நுழைவுத்தேர்வு எழுத இருக்கும் டாக்டர் ஸ்ரீமதி கூறும் போது, 'மருத்துவத்துறையில் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு, தோல் பிரிவில் எம்.எஸ். படிப்பதற்கான நுழைவுத் தேர்வு எழுத இருக்கிறேன். இதற்காக தர்மபுரியில் இருந்து சென்னை வந்து விடுதியில் தங்கி இருந்து அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் படித்து வருகிறேன். குறிப்பாக மகப்பேறு மருத்துவம் குறித்து நான் எதிர்பார்க்கப்படும் நூல் இங்கு இல்லாதது என்னை ஏமாற்றுவதாக உள்ளது. அதேபோல் நூலகத்தில் உணவகம் ஒன்று இருந்தால் செலவையும், நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும்' என்றார்.
கன்னிமாரா நூலகம்
திருவான்மியூரைச் சேர்ந்த கனிமொழி கூறும் போது, 'நர்சாக இருக்கும் நான், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் தொகுதி-4-க்கான தேர்வு எழுதுவதற்காக கன்னிமாரா நூலகத்திற்கு வந்து படிக்கிறேன். வீட்டில் தொந்தரவுகள் இருப்பதால் நூலகத்திற்கு வந்து படிக்கிறேன். இங்கு குளிர்சாதன அறையில் வெகுநேரம் இருந்து படிக்க முடியாது என்பதால் காற்றோட்டமாக நூலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் இருந்து படிக்கிறேன். ஆனால் வெளியே இருந்து படிப்பதற்கு போட்டித் தேர்வுக்கான நூல்கள் வழங்கப்படுவதில்லை. ஆதார் அட்டை நகல் மற்றும் பெயர் முகவரிகளை பெற்றுக்கொண்டு நூல்களை படிப்பதற்கு வழங்கலாம்' என்றார்.
நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஏஞ்சலா கூறும் போது, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுத இருக்கும் நான் கன்னிமாரா நூலகத்திற்கு வந்து படிக்கிறேன். வீட்டை விட அமைதியான சூழ்நிலையில் படிப்பதற்காக தான் கன்னிமாரா நூலகத்திற்கு வருகிறோம். துறை சார்ந்த நிபுணர்களை அழைத்து வந்து வகுப்புகளை நடத்துகிறார்கள். இதுபோதுமானதாக இல்லை. அதிக எண்ணிக்கையில் பயிற்சி வகுப்புகளை பயனுள்ள வகையில் நடத்த வேண்டும்' என்றார்.
நூல்கள் இல்லை
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் சிவில் நீதிபதிகள் தேர்வு எழுத இருக்கும் வேளச்சேரியை சேர்ந்த மாணவர் உதயநிதி கூறும் போது, 'சர்வதேச தரத்தில் பராமரிக்கப்படும் நூலகத்தை குறை கூற முடியவில்லை. இருந்தாலும் ஆரம்பநிலை தேர்வுக்கான நூல்கள், வினா-விடைகள் அதிகம் இருக்கின்றன. ஆனால் முதன்மை தேர்வுக்கான நூல்கள் மற்றும் மாதிரி வினா-விடைகள் போதுமான அளவு இல்லாததால் எங்களுடைய நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை' என்றார்..
இலவச இணையதள வசதி
ஒடிசாவை சேர்ந்த மாணவி சஞ்சன கூறும் போது, 'நீட் தேர்வுக்காக கடந்த ஒன்றரை மாதமாக ஐயப்பன்தாங்கலில் தங்கி இருந்து அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு வந்து படித்து வருகிறேன். நீட் தேர்வு தொடர்பாக கடந்த காலங்களில் உள்ள வினா-விடைகளை தேடித்தான் நூலகத்திற்கு வருகிறோம். ஆனால் சமீப காலத்தில் உள்ள வினா-விடைகள் இங்கு இல்லை. இலவசமாக இணையதள வசதியை செய்து தரவேண்டும். கூடுதல் அறைகள் ஒதுக்கினால் மாணவர்கள் முழு மனநிறைவுடன் படித்து பயனடைவார்கள்' என்றார்.
நூலகத்தின் தேவை
முகப்பேரை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி தட்சிணா கூறும்போது, 'அண்ணா நூலகம் குறித்து எங்களுடைய 6-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் தகவல் இடம் பெற்றுள்ளது. இதனால் எங்கள் ஆசிரியைகள் எங்களை இங்கு அழைத்து வந்துள்ளார்கள். இங்கு திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், சீவகசிந்தமாணி போன்றவை ஓலைச்சுவடிகளில் இருந்ததை பார்த்து பிரமிப்பாக இருந்தது. எங்களை போன்று சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அழைப்பு விடுத்து மாணவ-மாணவிகளுக்கு நூலகத்தின் தேவையையும், பெருமையையும் எடுத்துக் கூற வேண்டும்' என்றார்.
தனியார் பள்ளி ஆசிரியை சாந்தி கூறும் போது, 'மாணவர்களுக்கு நூலகங்களின் தேவை, பயன், அவசியம் குறித்து அறிந்து கொள்வதற்காக மாணவிகளை அழைத்து வந்து, நூலகத்தின் ஒவ்வொரு பிரிவுகளிலும் சென்று பார்வையிட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை நூலகங்களுக்கு அழைத்து வந்து பொது அறிவை வளர்க்க முன்வர வேண்டும்' என்றார்.
போட்டித்தேர்வில் பங்கேற்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் சிவசங்கர் கூறும் போது, 'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கான முதல் நிலை, 2-வது நிலை புத்தகங்களுடன் இறுதி தேர்வுக்கான புத்தகங்கள் போதுமான அளவு இல்லை. அதேபோல், வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடக்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தி தேர்வு செய்யலாம்.' என்றார்.
அதிகாரி சொல்கிறார்
கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அதிகாரி கார்த்திகேயன் கூறும் போது, 'உலக இணைய மின் நூலகத்துடனும், யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன் தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட நூலகங்களையும், கன்னிமாரா நூலகத்தையும் இணையவழி மூலம் இணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் எந்த மூலையில் இருப்பவர்களுக்கு தேவையான நூல்கள் எந்த நூலகத்தில் இருக்கிறது என்பதை தாங்கள் வசிக்கும் மாவட்டத்தில் இருந்தபடியே அறிந்து கொள்ள முடியும்.
நூலகங்களில் கணினி வழி மூலம் நவீன தொழில் நுட்பங்கள் புகுத்தப்பட்டு நூலகச் சேவையின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்காக 7-வது தளத்தில் 32 கணினி மூலம் இலவசமாக இணையதள வசதி செய்து தரப்பட்டு உள்ளது. தற்போது ரூ.34 கோடியில் நூலகம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர மாணவர்களின் தேவையை முழுமையாக நிறைவேற்ற ரூ.5 கோடி மதிப்பில் நூல்கள் வாங்கப்பட உள்ளது. சர்வதேச, தேசிய, மாநில அளவில் பல்வேறு துறை நிபுணர்களை அழைத்து வந்து மாணவர்களுடன் பேசவும் கலந்துரையாடல் செய்யும் 'TN-TOCK' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது' என்றார்.