உடல் மெலிந்து காணப்படுகிறதா அரிசிக்கொம்பன் யானை.! வெளியான தகவல்


உடல் மெலிந்து காணப்படுகிறதா அரிசிக்கொம்பன் யானை.! வெளியான தகவல்
x
தினத்தந்தி 23 Jun 2023 3:15 PM IST (Updated: 24 Jun 2023 9:06 AM IST)
t-max-icont-min-icon

அரிசி கொம்பன் யானை மெலிந்து எலும்புகளுடன் சுற்றித்திரிவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.

நெல்லை,

கேரளாவிலும், தேனி மாவட்டத்திலும் மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அந்த யானையை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை வன சரக்கத்திற்குட்பட்ட அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டது.

அரிசி கொம்பன் யானையின் கழுத்தில் ரேடியோகாலர் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அப்பர் கோதையாறு பகுதியில் அரிசி கொம்பன் யானைக்கு தேவையான உணவு, குடிநீர் கிடைத்து வருவதால் அந்த பகுதியிலேயே யானை சுற்றி வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அரிசி கொம்பன் யானை மெலிந்து எலும்புகளுடன் சுற்றித்திரிவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. இது யானை பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

அரிசி கொம்பன் யானை மூணாறு பகுதியில் பிறந்தது. அதன் பிறகு தேனி பகுதியில் இருந்து தற்போது அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டுள்ளது. அப்பர் கோதையாறு பகுதியில் யானைக்கு தேவையான தண்ணீர், உணவு வகைகள் கிடைக்கிறது. தினமும் யானையை டாக்டர் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்.

தினமும் யானை சாப்பிடும் உணவு போன்றவையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. யானையின் சாணத்தையும் டாக்டர் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். யானை ஏற்கனவே இருந்த சீதோசண நிலையில் இருந்து தற்பொழுது புதிய சீதோசண நிலைக்கு வந்துள்ளது. அதன் காரணமாக உடல் நிலையில் சில மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். அதை டாக்டர் குழுவினர் கண்காணித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

கடந்த 14 நாட்களாக 5 கிலோ மீட்டர் சுற்றளவிலேயே யானை சுற்றி வருகிறது. அரிசி கொம்பன் யானை குடியிருப்பு பகுதிக்கு வரும் என மக்கள் அச்சப்பட தேவையில்லை. தற்பொழுது கடல் மட்டத்திலிருந்து 1350 மீட்டர் மேல் உள்ள கோதை ஆற்றின் பிறப்பிடம் அருகே வனப்பகுதியில் தான் அரிசி கொம்பன் யானை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story