கருப்பு பட்டை அணிந்து டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கருப்பு பட்டை அணிந்து டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
தாமரைக்குளம்:
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றக்கூடிய டாக்டர்களுக்கு படிப்பிற்கு தகுந்தவாறு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கடந்த 2021-ம் ஆண்டு அரசாணை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் அரசு அறிவித்தபடி ஊக்கத்தொகை வழங்காத நிலையில் இது குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர் நல சங்க டாக்டர்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். இதில், அரசு டாக்டர்களுக்கு அரசு அறிவித்துள்ளபடி ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அரசு டாக்டர்களுக்கு படிப்பிற்கு தகுந்தவாறு ஊக்கத்தொகை வழங்காததை கண்டித்து, நேற்று தமிழ்நாடு அரசு மருத்துவ நலச்சங்க டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து, அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள டீன் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அந்த சங்கத்தின் டாக்டர்கள், அரியலூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரமேஷிடம் கோரிக்கை மனுக்களையும் அளித்தனர். போராட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவ சங்க மாவட்ட தலைவர் கொளஞ்சி நாதன், செயலாளர் டாக்டர் குணசேகரன், பொருளாளர் டாக்டர் சரவணன், துணைத் தலைவர் டாக்டர் முருகன், டாக்டர் சாய் தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.