மின்வாரிய அலுவலகத்தை மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு


மின்வாரிய அலுவலகத்தை மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 27 May 2022 12:59 AM IST (Updated: 27 May 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

60 ஆண்டுகளாக துங்கபுரத்தில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலகத்தை மாற்றக்கூடாது என அதிகாரியிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, துங்கபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் நேற்று மதியம் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்களில் சிலர் அலுவலகத்துக்குள் சென்று மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் துங்கபுரம் கிராமத்தில் சுமார் 60 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மின்வாரிய பிரிவு அலுவலகம் தற்போது வேறு கிராமத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதாக தகவல் வந்தது.எனவே இந்த பிரிவு அலுவலகம் துங்கபுரத்திலேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். துங்கபுரத்தில் இந்த மின்சார வாரிய பிரிவு அலுவலகம் தொடர்ந்து செயல்பட வாடகை இல்லாத கட்டிடம் அல்லது அரசு கட்டிடம் பெற்று தந்தால், அங்கேயே செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனுவினை பெற்று கொண்ட பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா கூறியதாக தெரிகிறது. அதற்கு துங்கபுரம் கிராம மக்கள் இன்னும் 3 மாதங்களில் வாடகை இல்லாத கட்டிடம் அல்லது அரசு கட்டிடம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாக தெரிகிறது.


Next Story