வேங்கைவயல் வழக்கில் டி.என்.ஏ. பரிசோதனைக்காக 4 சிறுவர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
வேங்கைவயல் வழக்கில் டி.என்.ஏ. பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் 4 சிறுவர்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.
டி.என்.ஏ. பரிசோதனை
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றம் செய்தவர்களை கண்டுபிடிப்பதற்காகவும், அறிவியல் ரீதியாக தடயங்களை சேகரிப்பதற்காகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் அனுமதி பெற்று வேங்கைவயல், இறையூர் பகுதிகளை சேர்ந்தவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ளஅந்த வகையில் இதுவரை 21 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து வேங்கைவயலை சோ்ந்த 16 வயது சிறுவன், இறையூரை சேர்ந்த 16 வயது சிறுவன், 14 வயது சிறுவன், 13 வயது சிறுவன் என 4 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுமதி பெற்றனர்.
ரத்த மாதிரி சேகரிப்பு
இதையடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி 4 பேருக்கும் டி.என்.ஏ. பரிசோதனைக்காக நேற்று ரத்த மாதிரி சேகரிப்பு நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்பாடு செய்தனர். இதற்காக 4 சிறுவர்களும் பெற்றோருடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.
கோர்ட்டு அறிவுறுத்தியபடி குழந்தைகள் நல குழும தலைவர் சதாசிவம் தலைமையில், உறுப்பினர் மற்றும் வெள்ளனூர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு போலீசார் ஒருவர் முன்னிலையில் சிறுவர்கள் 4 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் உடன் இருந்தனர். அப்போது சிறுவர்கள் எந்தவித எதிா்ப்பும் தெரிவிக்கவில்லை. ரத்த மாதிரி சேகரிப்பு முடிந்த பின் அவர்கள் அனைவரும் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.
கோர்ட்டில் ஒப்படைப்பு
சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் பெற்றனர். மேலும் அதனை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
கோர்ட்டு மூலம் அதனை சென்னை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.