டி.என்.ஏ. பரிசோதனைக்கு 8 பேர் மீண்டும் மறுப்பு


டி.என்.ஏ. பரிசோதனைக்கு 8 பேர் மீண்டும் மறுப்பு
x

வேங்கைவயல் விவகாரத்தில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு 8 பேர் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளனர். வழக்கு 4-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

வேங்கைவயல் வழக்கு

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதல் கட்டமாக 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த கடந்த ஏப்ரல் மாதம் முடிவு செய்ததில் 3 பேர் மட்டும் பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். அவர்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.

வேங்கைவயல் பகுதியை சோ்ந்த 8 பேர் டி.என்.ஏ. பரிசோதனைக்கு வர மறுத்தனர். அவர்கள் தரப்பில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் குற்றவாளிகளை அடையாளம் காண அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க டி.என்.ஏ. பரிசோதனை அவசியம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் புதுக்கோட்டை கோர்ட்டு மூலம் நடவடிக்கை மேற்கொள்ள ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.

டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுப்பு

இதைத்தொடர்ந்து டி.என்.ஏ. பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதுக்கோட்டை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதில் வேங்கைவயல் பகுதியை சேர்ந்த 8 பேரும் நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது டி.என்.ஏ. பரிசோதனை தொடர்பாக அவர்களது கருத்தை தெரிவிக்க அறிவுறுத்தி, மறுநாள் மதியத்திற்குள் பதில் அளிக்க நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.

இதைத்தொடா்ந்து 8 பேரும் நேற்று கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது அவர்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்தனர். ஒவ்வொருவரும் எழுத்து பூர்வமாக தங்களது கருத்தை வக்கீல் மலர்மன்னன் மூலம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். மேலும் எதற்காக மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்பது குறித்து தனித்தனியாக ஒவ்வொருவரிடமும் நீதிபதி விசாரித்தார்.

மறுப்பது ஏன்?

சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் விசாரணை அதிகாரியான துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி, அரசு தரப்பு வக்கீல் குமார் ஆகியோர் இந்த வழக்கில் டி.என்.ஏ. பரிசோதனை முக்கியத்துவம் குறித்தும், இவர்களிடம் மட்டுமில்லாமல் 119-க்கும் மேற்பட்டவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உள்ளதாகவும், இந்த பரிசோதனை மேற்கொள்வதால் இவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள் என்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக சித்தரிக்க போலீசார் முயல்வதாகவும், குடிநீர் தொட்டியில் அசுத்தத்தை கலந்தது யார்? என்பதை போலீசார் கண்டுபிடிக்காமல், அந்த அசுத்தம் யாருடையது என்பதற்காக டி.என்.ஏ. பரிசோதனை நடத்துகின்றனர் எனவும், அதன்மூலம் குற்றம் சாட்ட முயல்வதாகவும், சம்பவம் நடந்து 6 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுப்பு தெரிவிப்பதாக அந்த 8 பேரின் தரப்பில் வக்கீல் வாதத்தை முன்வைத்தார்.

வழக்கு 4-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

இதைத்தொடர்ந்து இந்த வழக்கை வருகிற 4-ந் தேதிக்கு நீதிபதி ஜெயந்தி தள்ளிவைத்தார். அன்றைய தினம் டி.என்.ஏ. பரிசோதனை தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும்.

டி.என்.ஏ. பரிசோதனைக்கு 8 பேர் ஏற்கனவே வர மறுத்தனர். தற்போது மீண்டும் மறுப்பு தெரிவித்த நிலையில், பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து 4-ந் தேதி தெரிந்துவிடும்.


Next Story