நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை மதுரையில் இருந்து தொடங்க வேண்டும்-அமைச்சர் மூர்த்தி பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை மதுரையில் இருந்து தொடங்க வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை மதுரையில் இருந்து தொடங்க வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி பேசினார்.
கூட்டம்
மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம், திருப்பாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. அமைச்சரும், மாவட்ட செயலாளருமான மூர்த்தி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் ஒரு சிறப்பான ஆட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்து கொண்டு இருக்கிறார். இந்த திராவிட மாடல் ஆட்சியின் சமூக நல திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைகிறது. தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தும் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றி வருகிறது. மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டம், மகளிருக்கு விலையில்லா பஸ் பயணம், புதுமை பெண் திட்டம் ஆகியவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. முதியோர் உதவித்தொகை ரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
வெற்றி உறுதி
மதுரையில் கலைஞர் நூலகம் தொடங்கப்பட்டு உள்ளது. இது மாணவ-மாணவிகளுக்கு வரப்பிரசாதம் ஆகும். மதுரை ஒத்தக்கடையில் இருந்து திருமங்கலம் வரை மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அலங்காநல்லூர் அருகே ரூ.44 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. அதனை விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.
தி.மு.க. அரசின் திட்டங்களை வீடு, வீடாக சென்று மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அரசின் சாதனைகளை ஓட்டுக்களாக மாற்ற வேண்டும். மதுரை எப்போதும் தி.மு.க.வின் கோட்டை என்பதனை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் நிரூபிக்க வேண்டும். முதல்-அமைச்சர் அறிவிக்கும் வேட்பாளர் மதுரையில் வெற்றி பெற வேண்டும். அதற்காக நாம் இப்போது இருந்தே பாடுபட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி மதுரையில் இருந்து தொடங்க வேண்டும். 40 தொகுதிகளில் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெறுவது உறுதி. அதில் முதல் வெற்றி அறிவிப்பு மதுரையில் இருந்து வர வேண்டும். அதற்காக நாம் அனைவரும் பாடுபட சபதம் ஏற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. வெங்கடேசன், அவை தலைவர் பாலமேடு பாலசுப்பிரமணியன், மதுரை மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, யூனியன் சேர்மன் வீரராகவன்,வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ஆலத்தூர் ராஜவேல், பகுதி செயலாளர் கவுரிசங்கர், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் கூடல்நகர் ராஜா, மாவட்ட துணை செயலாளர் இளங்கோ, மாவட்ட பிரதிநிதி மேலமடை அழகுபாண்டி, ஊராட்சி தலைவர்கள் நரசிங்கம் ஆனந்து, முருகேஸ்வரி சரவணன், ஆண்டார் கொட்டாரம் சீமான், யானைமலை கொடிக்குளம் திருப்பதி, கொடிமங்கலம் அழகு லட்சுமி ராமகிருஷ்ணன், செட்டிகுளம் பூங்கோதை மலைவீரன், காத கிணறு செல்விசேகர் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.