நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற பாடுபடுவோம் - நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்


நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற பாடுபடுவோம் - நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
x

“நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றியை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும்”, என்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம், காணொலி காட்சி வழியாக நேற்று நடந்தது.

நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நாம் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் கடந்து, 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். நம் அனைவரின் கடின உழைப்பின் பலனாகவே மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்திருக்கோம். ஆட்சிக்கு வருவதற்கு எவ்வளவு உழைப்பு தேவைப்பட்டதோ, அதைவிட அதிகமான உழைப்பு ஆட்சியை நடத்த தேவை. உழைப்பதற்கு நான் என்றைக்குமே தயாராகவே இருக்கிறேன். என் சக்திக்கு மீறியும் உழைத்துக் கொண்டு இருக்கிறேன்.

கடந்த ஆட்சியின் அலங்கோலத்தால், தமிழ்நாடு கடுமையான நிதி சிக்கலில் இருந்தது. அப்படி இருந்தும், போராடி மக்களுக்குத் தேவையான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றியும், அறிவிக்காத திட்டங்களை செயல்படுத்தியும் வருகிறோம்.

நாம் செயல்படுத்துகின்ற திட்டங்களை, மற்ற மாநிலங்களில் பிற கட்சிகள் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்து வருகிறார்கள். அப்படிப்பட்ட நம் அரசின் சாதனைகளை, இந்த 2 ஆண்டு முடிவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் 1,222 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் பொதுக்கூட்டம் நடத்தப்படாத இடங்களில் விரைவில் நடத்த அப்பகுதி பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

10 ஆண்டுகள் கழித்து மக்களின் தேவைகளை பற்றி சிந்திக்கும் ஆட்சி அமைந்திருப்பதாக, இந்த 2 ஆண்டு ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். ஆட்சி எவ்வளவு முக்கியமோ அதைவிட கட்சி முக்கியம். இதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். கட்சி வலுவாக இருக்க வேண்டும். நமது கவனம் கட்சியை வலுப்படுத்துவதிலும், தொண்டர்களை உற்சாகமாக வைத்துக் கொள்வதிலுமே அதிகமாக இருக்க வேண்டும். குறைகளை சொல்ல வரும் தொண்டர்களிடம் ஆறுதலாக பேசுங்கள். அந்த குறைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள். நமது குறைகளை கேட்க ஆள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை வந்தாலே, பலருக்கும் பாதி பிரச்சினைகள் தீரும். மனதின் பாரம் குறையும்.

இயக்கம் என்பது தலைமை தொடங்கி, கடைக்கோடி தொண்டன் வரை உளப்பூர்வமாக பிணைந்திருக்கும் அமைப்பு. ஒவ்வொரு மட்டத்திலும் ஒவ்வொருத்தருக்கும் ஆதரவும், அன்பும் இருக்கணும். எந்த மட்டத்திலும் சுணக்கமோ, மனவருத்தமோ இல்லாம பார்த்துக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு. ஒவ்வொரு தொண்டனும், இது 'நம்மோட ஆட்சி'னு பெருமைப்பட வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அந்த மனநிலையில் தொண்டர்கள் இருக்கிறார்களா? என்று நாம் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். இல்லையெனில், அதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்து சரி செய்ய வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கிறது. 40 தொகுதிகளிலும் நாம் வென்றாக வேண்டும் என்பதை இலக்காக கொண்டு நாம் பணியாற்ற வேண்டும். எல்லோருக்கும் ஒரே சமயத்தில் பதவிகளும், பொறுப்புகளும் கிடைப்பதில்லை. கட்சியிலும், ஆட்சியிலும் இதுதான் நிலைமை. சிலருக்கு மட்டுமே வாய்ப்புகள் வரும். மற்றவர்கள் காத்திருப்பார்கள். அதேசமயம் உழைத்துக் கொண்டேயிருப்பார்கள். உழைப்பவர்களுக்கு நிச்சயமாக அங்கீகாரம் கிடைக்கும்.

ஒவ்வொருவருக்கும் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்ற லட்சிய வேகம் இருக்க வேண்டும். அதேசமயம் நம்மிடம் இருக்கும் பதவி, பொறுப்பை கொண்டு கட்சியில் இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும், உற்சாகமூட்ட வேண்டும். கட்சியினர் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் செயல்பட்டால் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமின்றி, அதன் பிறகு வரும் சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான் பெரும் பலத்தோடு வெல்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story