தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு: சோனியாகாந்தி, பிரியங்காகாந்தி பங்கேற்பு


தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு: சோனியாகாந்தி, பிரியங்காகாந்தி பங்கேற்பு
x

தி.மு.க. மகளிரணி சார்பில் சென்னையில் மகளிர் உரிமை மாநாடு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் சோனியாகாந்தி, பிரியங்காகாந்தி உள்பட பெண் தலைவர்கள் பங்கேற்று பேசுகிறார்கள்.

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு அரசு சார்பிலும், தி.மு.க. சார்பிலும் தனித்தனியாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தி.மு.க.வில் உள்ள ஒவ்வொரு அணி சார்பிலும் இசை அரங்கம், கவி அரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் நடக்கிறது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மேற்கொண்டுள்ளார். மாநாட்டு மேடை-பந்தல் அமைக்கும் பணிகளை தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சோனியாகாந்தி, பிரியங்கா

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெறும் இந்த மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, அவரது மகளும், பொதுச்செயலாளருமான பிரியங்காகாந்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே எம்.பி., ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. சுஷ்மிதா தேவ், பீகார் மாநில உணவுத்துறை மந்திரியும், ஜக்கிய ஜனதா தளம் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினருமான லேஷி சிங், சமாஜ்வாடி கட்சி எம்.பி. டிம்பிள் யாதவ், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி துணை சபாநாயகர் ராக்கி பிட்லான், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மகளிரணி பொதுச்செயலாளர் ஆனி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய அரசியல் குழு உறுப்பினர் சுபாஷினி அலி ஆகிய பெண் தலைவர்களும் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

இந்த மாநாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். கனிமொழி எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.

வரவேற்பு

மாநாட்டில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் டெல்லியில் இருந்து நேற்று இரவு 11 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தனர்.

அவர்களை சென்னை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, க.பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், கீதாஜீவன், தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.


Next Story